நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்

Share this page with friends

நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் 29, அக்டோபர் 2021 அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்.

திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி கிராமம் சுவிசேஷபுரத்தில் பிறந்தவர் திரு. ஜே. ஞானதாஸ். இவர் இளம் வயது முதலே இசையின் மேல் ஆர்வம் கொண்டு, இசை வாசிக்க கற்றுக்கொண்டார்.

பழங்கால இசை வாத்தியங்களை கொண்டு ஆரம்பித்த இவரது சகாப்தம் டிஜிட்டல் இசை வரைக்கும் கொடி கட்டி பறந்தது. ட்ரம்ஸ் வாசிப்பதில் பல பரிணாமங்களை கண்டார்.

இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மறைந்த தலைவர் டி ஜி எஸ் தினகரன் அவர்களின் திரள் கூட்ட மேடைகளில் இவரது இசை அற்புதமானது. பாளையங்கோட்டை  பீஸ் ஏ.ஜி. சபையில் நீண்ட கால விசுவாசியாக அங்கம் வகித்து வந்த இவர் ஸ்தாபன பாகுபாடின்றி தேவன் தனக்கு தந்த இசைக் கலையை முறையாக முழுமையாக பயன்படுத்தி தேவனை மகிமைப்படுத்தினார்.

தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல், முழு அர்ப்பணிப்புடன் இசை துறையில் சகாப்தம் படைத்துள்ளார். பழகுவதற்கு மிக எளிமையானவர், இயல்பாகவும், வெளிப்படையாகவும் பேசும் குணம் கொண்டவர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலான இசை வாழ்க்கையில் இலட்சக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து தேவனை மகிமைப்படுத்தியுள்ள இவருக்கு பரலோகம் இன்று பதவி உயர்வு வழங்கியுள்ளது. ஆம், இதுவரை மனிதர்களின் பாடல்களுக்கு இசையமைத்தவர், இனி தேவதூதர்களின் பாடல்களுக்கு இசையமைக்க சென்றிருக்கிறார்.

சரீரத்தில் பல உபாதைகளோடு பல மாதங்களாக போராடிய இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 5, செப்டம்பர் 1972 அன்று பிறந்த இவருக்கு தற்போதைய வயது 49. இளம் வயதிலேயே ஏற்பட்ட இந்த இழப்பு வேதனைக்குரியதாக இருப்பினும் தனது பணியை வேகமாக நிறைவேற்றி முடித்து இளைப்பாறுதலுக்குள் சென்றிருக்கிறார்.

29, அக்டோபர் 2021 அன்று மாலை நடந்த இந்த சம்பவம் தென் மாவட்டங்களை சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு இசைக்கலைஞர்களும், அவரோடு பயணித்த இசையமைப்பாளர்களும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அன்னாரது நல்லடக்கம் அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி கிராமம் சுவிசேஷபுரத்தில் 30, அக்டோபர் 2021 அன்று காலை நடைபெறுகிறது.

இசைக்கலைஞர். திரு ஜே. ஞானதாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது உடன்பிறந்த இரு சகோதரிகள் மற்றும் முழு குடும்பத்தாரின் ஆறுதலுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

தகவல்: திரு. ராம்கி, பாளை


Share this page with friends