கடந்த காலங்களில், கிறிஸ்மஸ் பெருவிழா நாளன்று, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவந்த ஈராக் அரசு, இவ்வாண்டு முதல், அந்நாளை நாட்டு மக்கள் எல்லாருக்கும் விடுமுறை நாளாக அமைத்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக்கில், முதன்முறையாக, கிறிஸ்மஸ் பெருவிழா நாள், தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது, மிகுந்த மகிழ்வையும், திருப்தியையும் அளித்துள்ளதோடு,  அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் வாழ்வதன் முக்கியத்துவம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று, பாக்தாத் கல்தேய வழபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

இயேசுவின் பிறப்பு கொண்டாடப்படும், நாளை, ஈராக்கில், அனைத்து மக்களுக்கும் அரசு விடுமுறையாக நிரந்தரமாக அறிவிக்கவேண்டும் என்ற சட்ட வரைவுக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம், டிசம்பர் 16, இப்புதனன்று இசைவு தெரிவித்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அனுமதி குறித்து ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, பாக்தாத் துணை ஆயரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயண ஒருங்கிணைப்பாளருமான, ஆயர் Basilio Yaldo அவர்கள், இவ்வாண்டு கிறிஸ்மஸ், அனைத்து ஈராக் மக்களுக்கும் ஓர் உண்மையான கொண்டாட்டமாக இருக்கும் என்றும், இவ்வாறு இருப்பது இதுவே முதன்முறை என்றும் கூறினார்.

ஈராக்கில், கிறிஸ்மஸ் பெருவிழா நாளை, அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று, கடந்த அக்டோபர் 17ம் தேதி, கர்தினால் சாக்கோ அவர்கள், அரசுத்தலைவர்  Barham Salih அவர்களைச் சந்தித்தபோது விண்ணப்பித்தார் என்றுரைத்த ஆயர் Yaldo அவர்கள், நாடாளுமன்றத்தின் இந்த தீர்மானம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் முதல் கனிகளில் ஒன்றாக உள்ளது என்று கூறினார்.

கடந்த காலங்களில், கிறிஸ்மஸ் பெருவிழா நாளன்று, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவந்த ஈராக் அரசு, இவ்வாண்டு முதல், அந்நாளை நாட்டு மக்கள் எல்லாருக்கும் விடுமுறை நாளாக அமைத்துள்ளது என்றும் ஆயர் Yaldo அவர்கள் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில், வருகிற மார்ச் மாதம், 5ம் தேதி முதல், 8ம் தேதி முடிய, திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். (Asia News)

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்