சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27, 01:04 AM

சிவகங்கை: சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விரும்பும் கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும்.

தேவாலயம் கட்டப்பட்ட இடம் தேவாலயத்தின் பெயரில் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர்தான் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவத்தை சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அந்த விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி