வில்லியம் கேரி
(1761-1834)

இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வில்லியம் கேரியின் 261 ஆவது பிறந்தநாள்.

ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். உலகத்தையே செப்பனிட பிறந்தார் வில்லியம் கேரி.

1761 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து, 1793 ஆம் ஆண்டு கல்கத்தாவில் காலடி எடுத்து வைத்த இவர் திரும்பித் தன் தாய்நாட்டிற்கு சென்றதே இல்லை. 41 ஆண்டுகள் ஆண்டவரின் பணியை அரும்பாடுகள் பட்டு செவ்வனே செய்தார். பிரச்சினைகளும் போராட்டங்களும் இவர் வாழ்வில் பின்னிப் பிணைந்தது. தன் அருமை மனைவி மூளைக் கோளாறினால் பாதிக்கப்பட்டார். குழந்தையும் சுகவீனத்தால் இறந்துபோனது.

சோதனைகளை சாதனைகளாக மாற்ற ஆரம்பித்தார் வில்லியம் கேரி. வங்காள மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். ஒரியா, மராத்தி, அச்சாமிஸ், சமஸ்கிரதம் ஆகிய மொழிகளிலும் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். இதுமட்டுமல்லாது வேதாகமத்தின் பகுதிகளை 29 மொழிகளில் மொழிபெயர்த்தார்.

ஆசியாவில் செய்தித்தாள், நீராவியால் இயங்கும் எஞ்சின், சேமிப்பு வங்கி, தாவரவியல் சங்கம் ஆகியவைகளை முதல் முதலாகக் கொண்டு வந்தவர்.

பாட புத்தகங்களையும், இலக்கண நூல்களையும் எழுதினார். பள்ளிக் கூடங்களும், ஆதரவற்றோர் இல்லங்களும் இவரால் ஏற்படுத்தப்பட்டன.

உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் போன்ற சமுதாய தீமைகளை வேருடன் அகற்றினார். அரசாங்க உதவியுடன் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றினார்.

“வங்காள உரைநடை தந்தை” என்றும் “தற்கால மிஷனரி இயக்கங்களின் தந்தை” என்றும் போற்றப்படும் வில்லியம் கேரி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செராம்பூர் பல்கலைக்கழகம் ஆயிரம் ஆயிரம் மாணவர்களை உருவாக்கியது. இன்றும் வில்லியம் கேரியின் புகழை அது பறை சாற்றுகிறது.

“தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார். தேவனுக்காக பெரிய காரியங்களை சாதிக்க பார்” என்று முழங்கின வில்லியம் கேரியின் வார்த்தைக்கிணங்க நாம் வாழ ஆயத்தமா?