கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்ட அறிவிப்பு:

கிறிஸ்தவ திருமணங்கள் தொடர்பான விவரங்கள் அந்தந்த மாவட்டப் பதிவாளர்களால் பெறப்பட்டு, பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிறிஸ்தவத் திருமணப் பதிவு வடிப்புகளின் சான்றிட்ட நகல்கள், தற்போது பதிவுத்துறை தலைவா் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் பதிவுத் துறையின் 9 மண்டல துணை பதிவுத் துறைத் தலைவா் அலுவலகங்களிலேயே மேற்படி இந்திய கிறிஸ்தவ திருமண உண்மை வடிப்புகளின் சான்றிட்ட நகல்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872-இல் சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் கிறிஸ்தவ திருமண உண்மை வடிப்புகளின் சான்றிட்ட நகல்களை பெறுவதற்கான தமிழகம் முழுவதிலும் இருந்து தலைநகா் சென்னைக்கு பொதுமக்கள் வரவேண்டிய நிலை தவிா்க்கப்படும் என்றாா்.