சமீபத்தில் கோயம்புத்தூர் அருகில் ஒரு வீட்டில் சபை நடத்தக்கூடாது என்று இந்து முன்னணியினர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தாசில்தார் அலுவலகத்திலிருந்து இந்து முன்னணியினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும்வரை சபையை நடத்தக்கூடாது என்று தீர்மானித்தனர். காவல்துறையும் புகார் அளித்த இந்து முன்னணியினருக்கு ஆதரவாக இருந்துள்ளது.

சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெறும் வரை சபை நடத்தக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தி சபையின் போதகர் பாஸ்டர் ஜோசப் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவருக்காக வழக்கறிஞர் திரு. ரிச்சர்ட்சன் வில்சன் (கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய வாதாடி வென்ற வழக்கறிஞர் திரு. வில்சன் அவர்களின் மகன்) ஆஜராகி வாதாடியுள்ளார். கனம் நீதிபதி ஆதிகேசவலு பாஸ்டர் ஜோசப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 25 ,26 மத சுதந்திரத்தை வழங்கியுள்ளது. எனவே ஒரு வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்த அப்பகுதியிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் (பஞ்சாயத்திடமோ அல்லது நகராட்சி போன்ற அதிகாரிகளிடமோ) முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவர் தனது வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தலாம். ஆனால் அந்த ஜெபக் கூட்டத்தில் சத்தத்தை உயர்த்த மைக்குகள், ஒலி பெருக்கிகள், இசைக் கருவிகள், டிரம் அடித்தல் போன்றவைகளைப் பயன்படுத்தி அதிக சத்தத்தை உண்டாக்கக் கூடாது. வீட்டின் எதிரில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது. பொது அமைதியைக் கெடுக்கக்கூடாது என்றும், வீட்டில் சபை நடத்த யாரிடமும் (உள்ளாட்சி அமைப்புகள்) முன் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், பாஸ்டர் ஜோசப் சபை நடத்தக்கூடாது என்று தாசில்தார் பிறப்பித்த ஆணையை சட்டப்படி செல்லாது என்று கூறி தீர்ப்பளித்துள்ளார். எனவே போதகர்கள் இதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டபடி மைக்குகள், ஒலி பெருக்கிகள், ஸ்பீக்கர் பாக்ஸ்கள், இசைக்கருவிகள் பயன்படுத்தியும் டிரம்களை அடித்தும் அதிக சத்தம் எழுப்புவதை குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் சபைக்கு எதிரில் வாகனங்களை (சைக்கிள்கள், பைக்குகள், கார்கள், வேன்களை) நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மற்றும் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது . சென்னை உயர் நீதிமன்ற கனம் நீதிபதி ஆதிகேசவலு வழங்கிய இந்த தீர்ப்பின் சாராம்சத்தை வரும் ஞாயிறு சபைகளில் கூறி விசுவாசிகள் தங்களது வாகனங்களை சபைக்கு வெளியே ஒழுங்காக நிறுத்தி வைக்க ஆலோசனை தர வேண்டும். சபையில் சத்தமாக அல்லேலூயா கூறுங்கள் என்று சொல்லுவதை சற்று குறைத்துக்
கொள்ளுங்கள்.

சவுண்டு சிஸ்டம்தான் பல பிரச்சினைகளுக்கு காரணம். அதனால் கூட்டங்களை நடத்தும்போது அங்கு வந்துள்ள மக்களுக்கு அங்கு பாடப்படும் பாடல்களும், இசைக்கப்படும் இசையும் கேட்டால் போதும். முழு ஊரும் சத்தியத்தை கேட்டு இரட்சிக்கப்பட வேண்டும் என்று அதிக சத்தத்தை வைத்து பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள மதசார்பற்ற மக்களாட்சி முறைக்காகவும், நீதிமன்றங்களுக்காகவும் கர்த்தரைத் துதிப்போம். நீதிமன்றத்தின் ஆணைகளை நிறைவேற்றுகின்ற அரசு அதிகாரிகளுக்காகவும் கர்த்தரை துதிப்போம். சபைகளின்
பிரச்சினைகளுக்காக போதகர்களுக்காக வழக்காடும் நல்ல வழக்கறிஞர்களுக்காக கர்த்தரை துதிப்போம்.

மேற்கண்ட செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் கர்த்தரை துதிப்போம். நீதிமன்ற ஆணையின் நகல் தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியில் நேரடியாகவும்,வாட்ஸ்அப், மெயிலிலும் பெற்றுக்கொள்ளலாம்

M.ஜேம்ஸ் ராதாகிருஷ்ணன்.
தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம்
TAMILNADU STATE JOINT SECRETARY
151/C2, OLD TALUK OFFICE ROAD,
THENI TALUK, THENI DISTRICT -625531.
7094734715.