ஊழியர்களின் கவனத்திற்கு !

ஊழியர்களின் கவனத்திற்கு!

இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக புத்தியுடன் ஞானமாக நடந்து கொள்வது மிகவும் அவசியம் எனவே;

A. அதிக அலச்சியம் வேண்டாம். (Negligence)

அலச்சியம், நிர்விசாரம், அசட்டை, அசதி எப்போதும் சில இழப்புகளை கொண்டு வரும். நடக்கிறது நடக்கட்டும், வருகிறது போல பார்த்துக்கொள்ளலாம் என்கிற உணர்வுகளுக்கு விலகுவோம். உதாரணம்: ஏசா மற்றும் இஸ்ரேவேல் ஜனங்கள்.

B. அதீத சுயப்பச்சாதாபம் வேண்டாம் (Self pity)

வீட்டில் இரு என்றால் வீட்டில் தான் இருக்க வேண்டும். எகிப்தில் உள்ள வீட்டில் ஐயோ சத்தம் கேட்கிறதே ஐயோ பாவம் என்று உதவி செய்ய வேண்டிய நேரமல்ல எகிப்தை விட்டு புறப்பட தயாராக வேண்டிய நேரம். எனக்கு ஒன்றும் செய்யாது, நான் செத்தாலும் பரவாயில்லை என்று நம்மை விட பிறர் மேல் வைக்கும் அதீத இரக்கத்தை விட்டு விடுவோம். எனவே கர்த்தர் இரக்கம் பாராட்ட சொல்கிறவர்களுக்கு இரக்கம் பாராட்டுங்கள். அதினால் இரக்கம் உண்டாகும்.

C. அதிக விதண்டாவாதம் வேண்டாம் (Self justification)

நோவாவை பார்த்து எத்தனையோ அழுகுரல் சத்தம் எழும்பி இருக்கும், என்னை காப்பாற்றும் என்று எத்தனை அழுகுரல் சத்தத்தை நோவா கேட்டு இருக்க கூடும். ஆனால் அவர் அதை கவனிக்க வில்லை ஏனெனில் திறவு கோல் கர்த்தர் கையில் இருக்கிறது. எனவே பேழைக்குள் இருக்க கற்றுக் கொள்வோம். திறவு கோல் இல்லாமல் பிறரை காப்பாற்ற போய் நீங்கள் வெள்ளத்தில் மூள்காதீர்கள்.

D. கர்த்தரை மிஞ்சின ஆத்தும பாரம் வேண்டாம் (Hyper ministries)

கிறிஸ்துவை மிஞ்சி ஆத்துமாக்கள், ஊழியம் என்று போகாதிருங்கள். சுவிசேஷம் அறிவிக்க வேண்டும், ஊழியம் செய்ய வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உலகம் முழுவதும் ஆதாயம் செய்தாலும் தன் ஆத்துமாவை இழந்தால் யாருக்கு லாபம். எனவே தேவ சித்தத்தின் படி கர்த்தர் விரும்புகிறப்படி, அவரது நேரத்தில், அவரது வழியில் சிலரை அக்கினியில் இருந்து இழுத்து நம்மையும் காத்துக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய ஆவியானவரின் வழி நடத்துதலோடு, நிதானத்தோடு, சமாதானம் நிறைந்த பதட்டம் இல்லாத இருதயத்தோடு அவருடைய வார்த்தையின் படி நாம் எதை செய்தாலும் அதில் தேவ சித்தம் வெளிப்படும். அவசரம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவற்றில் பிடிபட்டு தவறான தீர்மானங்கள் எடுத்தால் அது நம்மை ஏமாற்றி விடும்.

E. அதீத நம்பிக்கை வேண்டாம் (Over confidance)

நான் ஜெபித்தால், நான் கட்டளை இட்டால், நான் தீர்க்கதரிசனம் உரைத்தால், நான் முழங்கால் இட்டால், அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என்கிற நப்பாசையை விட்டு விட்டு கிறிஸ்துவின் சத்துவத்தையும், கிருபையையும் சார்ந்து கொள்வோம்.

F. அதீத ஊற்றுநோக்குதல் வேண்டாம் (Excessive observation)

இன்று என்ன நடந்தது, அங்கே என்ன நடந்தது, யாருக்கு என்ன ஆச்சு என்கிற பதட்டம் வேண்டாம். மீடியா, மொபைல், நியூஸ், செய்தி தாள்களை புரட்டுதல், போன்ற உலக காரியங்களை நாட்டம் கொள்ளும் காரியத்தில் இருந்து விலகி தேவையான நல்ல பங்கை தெரிந்து கொள்வோம். தேவை இல்லாமல் எல்லாவற்றிலும் தலையிடாமல் இருங்கள்.

G. வரங்களில் அதீத திருப்தி ஆகாதிருங்கள்

வரங்கள், விசுவாசம் நல்லது. ஆனால் அவைகளும் செயல்படாமல் போகலாம். கிறிஸ்துவுக்கும் நாசரேத்தில் அற்புதம் செய்ய முடியாமல் போனது. கிறிஸ்துவை மதிக்காத, கிறிஸ்துவை ஏற்று கொள்ள மனதில்லாத ஜனங்கள் நடுவில் நமது வரங்களை விரயம் ஆக்க வேண்டாம். கிறிஸ்துவின் அன்பில், அவரது கனிகள் மற்றும் வார்த்தையில் உறுதியாக இருந்து வஞ்சனைக்கு தப்புவோம்.

எனவே இந்த நாட்களில்

?? அமர்ந்து இருந்து நம்மை நாமே நிதானித்து கொள்வோம். தேவ பிரசனத்தில் நிறைவோம்.

?? அதிகமாக சரிசெய்ய வேண்டிய பகுதிகள், மனம் திரும்ப வேண்டிய இடங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து நமது இயந்திரத்தை செப்பனிடுவோம்.

?? உலக கவலை மற்றும் ஐசுவரிய மயக்கம் கொள்ளாமல் அடுத்த கட்ட ஊழியத்திற்காக ஆயத்தம் ஆவோம்.

?? வேத வசனம் தியானம், ஜெபம், உபவாசம் போன்றவற்றின் பாதையில் கவனம் செலுத்துவோம். விழித்து இருப்போம்.

?? நம்மால் அக்கினியில் இருந்து தேவ சித்தத்தின் படி காப்பாற்றப்பட வேண்டியவர்களை நாம் புத்தி உள்ளவர்களாக இருந்து சரியாக காப்பாற்ற, விசேஷமாக நமது மந்தை, மற்றும் குடும்பத்தினரை காப்பாற்ற கவனம் கொள்வோம்.

கர்த்தர் தாமே சீக்கிரமாக இதையும் கடந்து போக வைப்பார். கர்த்தர் கிருபை கூட இருப்பதாக!

செலின்