அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பதிவு: ஜனவரி 05,  2021 09:46 AM

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மயிலாடியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடந்த பின்பு மாலையில் வழக்கம் போல் ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் ஊழியர்கள் ஆலயத்தை திறக்க சென்ற போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அங்குள்ள சொரூபத்தின் கையிலில் இருந்த தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி தராசும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

மேலும், அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சுற்றி வந்த காட்சி பதிவாகி இருந்தது. எனவே, 2 மணியளவில் கொள்ளை நடந்திருக்கலாம் என தெரிகிறது.

இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் மயிலாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தினதந்தி