
கிறிஸ்தவ மத அடையாளம் கொண்ட பரிசு பொருட்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்..
TN Local Body Election 2022: கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத அடையாளத்துடன் கூடிய பரிசுப் பொருள் விநியோகம் என தகவல்.
Feb 17, 2022, கோவை

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி 8 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெரியசாமி என்பவர் கிறிஸ்தவ வாக்காளர்களுக்கு சிலுவையுடன் கூடிய ஜெபமாலை, இரு மெழுகுவர்த்திகளை பிளாஸ்டிக் தட்டில் கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி 27 வார்டுகளை கொண்டது. இதில் 10 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் முதல் முறையாக தேர்தலை சந்திப்பதால் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற திமுக ,அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த நகராட்சியில் 8 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பெரியசாமி என்பவர் சிறுபான்மையினர் வாக்குகளை கவர்வதற்காக ஜெபமாலையுடன் கூடிய சிலுவையும், இரு மெழுகுவர்த்திகளையும் பிளாஸ்டிக் தட்டில் வைத்து கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியினரும் அவர்களுக்கு போட்டியாக கிறிஸ்தவ மத அடையாளம் கொண்ட பரிசு பொருட்களை கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
பாரதி ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக கடும் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் அதிகளவில் வசிப்பதால் அவர்களை கவர பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பெரியசாமி தாமரை சின்னம் பொறித்த பிளாஸ்டிக் தட்டில் இந்த ஜெபமாலை, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றார்.
மத அடையாளங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பதன் மூலம் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பெரியசாமி ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் tcn media இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.