தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் திறப்பது தொடர்பாக பல கேள்வியும் குழப்பங்களும் நம்மில் சிலருக்கு இருக்கலாம். ஆகஸ்ட் மாதத்திலாவது ஆலயங்களை திறக்கலாமா? ஆகஸ்ட் மாத தமிழக அரசின் அறிவிப்பில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது என்னென்ன? இந்த பதிவில் விபரமாக காணலாம்.

கடந்த ஜூலை மாத அறிவிப்பில் சில நிபந்தனைகளுடன் கிராமபுறங்களிலுள்ள சிறிய மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டது. தற்போது ஊராட்சி பகுதிகள் உட்பட பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய அளவிளான மதவழிபாட்டு தலங்களை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னென்ன?

1) நோய் கட்டுப்பாடு பகுதிகளை தவிர்த்து பிற இடங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2) ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கு குறைவாக இருக்கும் வழிபாட்டு தலங்கள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3) மாவட்ட ஆட்சி தலைவருடைய முன் அனுமதியுடன் வழிபாட்டு தலங்களை திறக்க கேட்கப்பட்டுள்ளது.

4) ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்

மதவழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக நாம் அறிந்திருக்க வேண்டியவைகள்:

1) ஆகஸ்ட் மாதத்திலுள்ள ஐந்து ஞாயிற்று கிழமைகளும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுகிழமைகளில் எவ்வித மதவாழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதி இல்லை.

2) ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் (ஆண்டு வருமானம் 10 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் ஆலயங்கள்) பொதுமக்கள் கூடி வர தடைசெய்யப்பட்டு்ள்ளது.

3) அரசு செய்தி வெளியிட்டு குறிப்பு 6 வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மதம் சார்ந்த எவ்வித கூட்டங்கள் (வீடுகளிலோ பிற இடங்களிலோ) நடத்த முற்றிலுமாய் தடை செய்யப்பட்டுள்ளது.

4) மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மதவழிபாட்டு தலங்களிலும் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து பெரிய வழிபாட்டு தலங்களிலும் (10 ஆயிரத்திற்கு மேல் வருமானம் உள்ளவைகள்) பொது மக்கள் தரிசனம் / ஆராதனை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

5) குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடந்து அமலில் இருக்கும்.

அன்பானவர்களே, மேற்கண்ட விதிமுறைக ளையும் நிபந்தனைகளையும் உற்று நோக்கும் போது கிறிஸ்தவ தேவாலயங்களை திறப்பதும் ஆராதனைகள் நடத்துவதும் சற்று ஆபத்தானதே. ஒருவேளை அரசு செய்தி குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் உங்கள் திருச்சபைக்கு பொருந்துமானால் முறையான அனுமதி பெற்று திறக்கலாம். எனினும் நோயின் தீவிரம் பெருகி வரும் இக்காலசூழ்நிலையில் நம்மையும் சபை மக்களையும் காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆகவே ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை கிறிஸ்தவ ஆலயங்கள் திறப்பதில் சற்று பொறுமை காப்பது நல்லது. காலச்சிறந்தது.

மக்களின் வாழ்வில் நம்பிக்கையையளித்து மனபாரத்தை நீக்கும் நம் தேவாலயங்கள் மிக விரைவில் திறக்கப்பட வேண்டுமென்பதே ஒவ்வொரு தனிமனிதனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மிக விரைவில் சூழ்நிலைகள் சாதகமாக அமையவும், அனைத்து ஆலயங்களையும் திறக்க முறையான அனுமதி கிடைக்கவும் ஜெபிப்போம்.