கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஊர்வலம் உள்ளிட்டவை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பண்டிகையில் முக்கியமாக இடம் பிடிப்பது ஸ்டார்கள் ஆகும். வீடுகள் மற்றும் தேவாலயங்களில் வண்ண, வண்ண விளக்குகளால் ஆன ஸ்டார்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். ஸ்டார்கள் விற்பனை இதற்காக தற்போது ஸ்டார்கள் விற்பனை சூடுபிடித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்காக கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல கவர்ச்சியான வண்ணங்களில் மின் விளக்கு பொருத்தப்பட்ட ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் ஆவர்முடன் வாங்கி செல்கிறார்கள். சாதாரண ஸ்டார்கள் ரூ.45 முதல் ரூ.350 வரையில் கிடக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிகளால் ஆன ஸ்டார்கள் ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கிறிஸ்துமஸ் மரங்களும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைப்பது வழக்கம். ஏசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் இந்த கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் வைப்பதற்காக கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
10 அடி உயர மரம் குடில் செட் ரூ.750 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் கிறிஸ்துமஸ் மரம் 1 அடி முதல் 10 அடி உயரம் வரை உள்ளது. மரத்துடன் பால், பெல், இயேசு கிறிஸ்து மற்றும் பொம்மைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதே போல் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் ரூ.400 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து தஞ்சையை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு விற்பனைக்காக கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், மரங்கள் பல வகைகளில் வந்துள்ளன. இதனை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். அதிக அளவிலான மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஸ்டார்களை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். வீடுகளில் தொங்க விடுவதற்காக சிறிய ரகங்கள் கூட விற்பனைக்காக உள்ளன’’என்றார். மின்விளக்கு அலங்காரம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் வர்ணம் பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் போன்றவை செய்யப்பட்டு வருகின்றன.