கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, ஏஞ்சல் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், மணிகள், டோர்கார்னர் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் மும்முரமாக விற்பனையாகின்றன.

கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது சென்னை :

உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை நட்சத்திரம் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிப்பார்கள். மேலும் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அலங்காரமும் செய்வார்கள்.
இதையொட்டி கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் வைப்பதற்காக கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், குடில்களை வாங்கி செல்கிறார்கள்.

சென்னை பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப் பேட்டை, தி.நகர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, ஏஞ்சல் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், மணிகள், டோர்கார்னர் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் மும்முரமாக விற்பனையாகின்றன. கிறிஸ்துமஸ் பொருட்கள் பெரும்பாலும் சிவப்பு வண்ணங்களில் இடம்பெற்றுள்ளன. கைவினை கலைஞர்கள் பிரத்தியேகமாக வடிவமைத்த அழகிய பொருட்களும் விற்பனையாகின்றன.

கிறிஸ்துமஸ் மரங்களில் தொங்கவிடும் வகையில் மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட பொம்மைகள், கடலில் கிடைக்கும் அலங்கார பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. அலங்கார விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகள், உடைகள் போன்றவையும் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்கள், சாக்லேட்டுகளும் உள்ளன.

இதுதொடர்பாக சென்னை பாரிமுனையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் மற்றும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் முகமது அலி கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை பெரிய அளவில் நடைபெற வில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட இப்போது விற்பனை பரவாயில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஏராளமான அலங்கார பொருட்கள் விற்பனைக்கு உள்ள நிலையில் தற்போது தான் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

தற்போது கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், தொப்பிகள், கிறிஸ்துமஸ் குடில்கள், அதை அழகுபடுத்தும் அலங்கார பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன.

இதற்கு முன்பு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், ஆந்திர, கேரளா ஆகிய வெளிமாநிலங்களிலும் இருந்து இங்கு வந்து கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை வாங்கி செல்வார்கள். கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் நீடிப்பதால் இந்த ஆண்டும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில வாடிக்கையாளர்கள் வரவில்லை. தமிழகம் முழுவதும் இருந்து வாடிக்கையாளர்கள் வருகை தந்து வாங்கி செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தற்போது ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை பெருகியுள்ள நிலையில் பல இணையதளங்கள் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனையையும் தொடங்கி உள்ளன.

தங்கள் இணைய தளங்கள் மூலம் என்னென்ன பொருட்கள் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும் காட்சிப்படுத்தி உள்ளனர். இதைப்பார்த்து ஆன்லைன் மூலம் பொது மக்கள் கிறிஸ்துமஸ் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் குழு பாடல் கொண்டாட்டங்கள் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை தெரிவிக்கும் வகையில் குழு பாடல் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி மாலை நேரத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் திரளும் கிறிஸ்தவர்கள் அங்கிருந்து வீதிகள் தோறும் குழு பாடல்களை பாடியபடி செல்கிறார்கள். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சாக்லேட் மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்குகிறார். மேலும் அந்த குழுவினர் கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள உறுப்பினர் வீடுகளுக்கு சென்று பாடல்களை பாடி வருகிறார்கள்.

பதிவு: டிசம்பர் 07, 2021

மாலை மலர்

https://www.maalaimalar.com/devotional/christianity/2021/12/07111729/3271458/Sales-of-Christmas-decorations.vpf