கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பதிவு: டிசம்பர் 24, 2021 14:34 IST

கிறிஸ்துமஸ் பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து

ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டன. இந்த வருடம் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் வழிபாடு நடத்துவதற்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதாலும் விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டாக்டர். ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):-

ஏசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி, பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என ஏசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (ம.தி.மு.க. பொதுச் செயலாளர்):-

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கலவரங்களும், ரத்தக் களறிகளும் மனித சமுதாயத்திற்குப் பேரபாயமாக அச்சுறுத்தும் ஆபத்தில் இருந்து விடுபடுவதற்கு ஏசுநாதரின் அறிவுரைகள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.

மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் என கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்):-

இயேசு கிறிஸ்துவின் வழியில் மதம் சாராமல் அனைவரும் ஒன்றுபட்டு, நல்லெண்ணங்களை வளர்க்க வேண்டும்.

சாதி, மத வேற்றுமைகளை தாண்டி, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, மனித நேயத்தோடு வாழ்ந்து குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

கிறிஸ்தவ மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து, எல்லா வளமும் பெற்று, நல்ல உடல் நலத்துடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர்):-

ஏசு கிறிஸ்து, இவ்வுலகில் உள்ள மக்களின் பாவத்தை ஏற்று ரட்சிக்கப் பிறந்தார். ஏசுபிரான் நமக்கு அருளிய பாவ மன்னிப்பு, கருணை காட்டுதல், பகிர்ந்து உண்ணுதல், நேசித்தல் போன்ற நற்குணங்களை நாமும் கடைபிடித்து அமைதியையும், சமாதானத்தையும் ஏற்றுக் கொள்வோம்.

உலகமெங்கும் பரந்து வாழும் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம்:-

இல்லாதவர்களுக்கு இயன்ற உதவி செய்தலே உண்மை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆகும். குதூகலம் நிறைந்த இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் அமைதியும், சமாதானமும் நம் அனைவரிடமும் நின்று நிலைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், அன்புமணி ராமதாஸ் எம்.பி., கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், இந்திய தேசிய லீக் தலைவர் முனிருத்தீன் ஷெரீப் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.