தென்கொரிய அரசாங்கம்  மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்
News
  
World
  

தென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்

சோல்: கொவிட்-19 தொடர்புகளின் தடங்கள் குறித்த விவரங்களை அறிந்திட தென்கொரிய போலிசார் சென்ற வியாழக்கிழமையன்று அத்துமீறி ஒரு தேவாலயத்திற்குள் புகுந்தனர். இதன் தொடர்பில் அத்தேவாலயம் தென்கொரிய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக கூறியுள்ளது.

தென்கொரியாவில் இரண்டாவது மிகப் பெரிய கிருமித்தொற்று குழுமம் ‘சாராங் ஜெல்’ தேவாலயத்தில் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி குறைந்தது 739 பேர் இக்குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டது.

கடந்த திங்கட்கிழமையன்று தேவாலயத்தின் சமயபோதகரான ஜுங் குவாங்-ஹூன்னுக்குக் கிருமி தொற்றியிருந்தது உறுதியானது. அதற்குமுன் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஒரு பேரணியில் கலந்துகொண்டு தாம் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

முக்கியமான தகவல்களை வெளியிடாமல், பொதுச் சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைக்காமல் இருப்பதன் தொடர்பில் தேவாலயத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

புதிய அரசாங்க ஆணைகளால் பிரார்த்தனை செய்யும் சுதந்திரமும் தங்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாக தேவாலயத் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்புகளின் தடங்களை அறிவதற்காக போலிசார் வலுக்கட்டாயமாகத் தேலாயத்திற்குள் நுழைந்தனர் என்றும் தேவாலய அதிகாரிகளுக்கும் போலிசாருக்கும் இடையே கிட்டத்தட்ட 10 மணி நேரம் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் தேவாலயத்தின் பிரதிநிதிகள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலிசுக்குத் தேடுதல் பணியை மேற்கொள்ளுமாறு, சோல் அதிகாரிகள் உத்தரவிட்டதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர்கள் கூறினர்.

சேர்ந்து பாடும் போதும் வழிபாட்டு வாசகங்களைக் கூறும்போதும் எச்சில் துளிகள் மூலம் கிருமி பரவும் சாத்தியம் அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டியுள்ளனர். சென்ற செவ்வாய்க்கிழமையன்று சோல் பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேரடிச் சேவைக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இத்தகைய உத்தரவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தேவாலயச் சேவைகள் நின்றுபோக முடியாது என்றும் கிறிஸ்தவ குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மார்ச் மாதத்தை அடுத்து நேற்று ஆக அதிக எண்ணிக்கையான 397 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் தென்கொரியாவில் பதிவாகின.

Thank you: Tamil Murasu