அனுப்பர்பாளையம்:கணக்கம்பாளையத்தில் உள்ள தேவாலயத்தை திறக்க அனுமதிக்க வலியுறுத்தி, கிறிஸ்துவ அமைப்பினர் பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் திறக்க அரசு தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது.

தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருகிறது. இதனால், ஆராதனை நடத்துவதற்காக தடை உத்தரவை நீக்கி தேவாலயத்தை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என பாதிரியார் வில்லியம்ஸ் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர், பெருமாநல்லுார் போலீஸ் மற்றும் திருப்பூர் ஆர்.டி.ஓ., விடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு, இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்க நிறுவனர் ஜோஸ்வா ஸ்டீபன், மீனாட்சி நகர் தேவாலய பாதிரியார் வில்லியம்ஸ் தலைமையில், பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன், கிறிஸ்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையறிந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். அதில், ‘தேவாலயம் திறப்பு குறித்து, ஆர்.டி.ஓ., விடம் தான் பேச வேண்டும். போலீசாருக்கு சம்மந்தம் இல்லை,’ என்றார். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.

நன்றி: தினமலர்  (டிச 23,2020)