தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை சபை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் ஆலயத்தில் இருந்து வெளியேற்றினர்.

பதிவு: ஜூலை 11, 2021 தர்மபுரி:
புதிய ஆயர் நியமனம்
தர்மபுரியில் சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயம் உள்ளது. இங்கே ஆயராக பிரபு மோகன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் சென்னிமலையில் இருந்து அன்புராஜ் என்பவர் பணியிடம் மாறுதலாகி தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் அன்புராஜ் பொறுப்பேற்க வந்தபோது அவருக்கு ஆதரவாக ஒரு சிலரும், ஏற்கனவே உள்ள ஆயர் பிரபு மோகனுக்கு ஆதரவாக பெரும்பாலான சபை மக்களும் அங்கு கூடினர். தன்னை பொறுப்பேற்க விடாத காரணத்தால் ஆலயம் முன்பு ஆயர் தனது மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆயர் மற்றும் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே தர்மபுரி ஆயர் பிரபு மோகன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு பணியிடம் மாற்றப்பட்டார்.
வாக்குவாதம்
இந்த நிலையில் ஆயர் அன்புராஜ் நேற்று காலை தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயத்திற்கு பிரார்த்தனை நடத்த வந்தார். அப்போது ஆலயத்தில் இருந்த சபை மக்கள் பெரும்பாலானோர் ஆலயத்தின் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்ட ஆயர் அன்புராஜை ஏற்கமாட்டோம். அவரை ஆயராக ஏற்க முடியாது. புதிய ஆயர் நியமிக்கப்படும் வரை அவர் நடத்தும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள மாட்டோம். எனவே அவரை பிரார்த்தனை நடத்த அனுமதிக்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆயர் அன்புராஜூக்கு ஆதரவாக ஒரு சிலரும் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
இதில் சமரசம் ஏற்படாததால் ஆலயத்தில் இருந்த ஆயர் அன்புராஜ் மற்றும் இரு தரப்பினரையும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆலயத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயத்தில் ஆயர் நியமன பிரச்சினைக்கு தீர்வாக உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயத்திற்கு புதிய ஆயரை நியமிக்க வேண்டும் என்று சபை மக்கள் சார்பில் கோவை மண்டல பேராயர் திமோத்தீஸ் ரவீந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பு: சபைகளுக்குள் நடைபெறும் மோதல்கள் மாறவும், அரசியல் அதிகாரங்கள் ஒழிந்து, தேவ சமாதானம் பெற்று சமூகத்தில் நற்சாட்சியை காத்துக்கொள்ள ஜெபியுங்கள்
சமீபத்தில் வெளியானவைகள்: