தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை – குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு போராட்டம்

தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை – குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு போராட்டம்

தேர்தல் நெருங்கும் வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் கோவளம், கீழமணக்குடி இடையே உள்ள கடல் பகுதியில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க, மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு முயற்சி மேற் கொண்டது. இதற்கு மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு எதிராக மீனவ மக்கள் மற்றும் கடற்கரை பகுதி மக்களின் வாக்கு திரும்பியது. தேர்தலின்போது துறைமுகத்துக்கு எதிரான பிரச்சாரங்கள், போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. தேர்தலில் காங்கிரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சரக்கு பெட்டக துறைமுகத் திட்டம் தொடர்பான பேச்சு அதன்பிறகு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் மூலம் கன்னியாகுமரி சரக்கு பெட்டக துறைமுகப் பணிகள் நடைபெற உள்ளதாக தகவல் பரவியது. இதுபோன்ற திட்டம் நிரந்தரமாக கூடாது என வலியுறுத்தி, கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் முன் நடந்த போராட்டத்துக்கு கோட் டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்தார். இதேபோல கன்னியாகுமரி அலங்கார உபகாரமாதா ஆலயத்தில் கருப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கீழமண க்குடி, கோவளம், குளச்சல், குறும்பனை, மேல்மிடாலம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலோடு மக்களவைக்கான இடைத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, மீனவர்களை பாதிக்காத வகையிலான முடிவுகள் கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட் பாளர்களின் வாக்குறுதிகளாக அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thanks: hindutamil.in