
புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் முற்றுகை.

புதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் திடீரென முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி மிஷன் வீதியில் பேராயர் இல்லம் உள்ளது. இங்கு பேராயர் மறைமாவட்ட முதன்மை குரு, பொருளாளர் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் தங்கியுள்ளனர். இதில் பொருளாளர் பதவியிலிருந்த அருட்தந்தை ஒரு மாதத்துக்கு முன்பு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இந்த உத்தரவு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அருட்தந்தையர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக பேராயர் இல்லத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தல் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரி தலித் கிறிஸ்தவர்கள் விடுதலை இயக்க கொள்கை பரப்பு செயலாளர் பெர்ணான்டஸ், தலைவர் மேரி ஜான் உள்ளிட்ட சில அமைப்புகளின் நிர்வாகிகள் பேராயர் இல்லத்துக்கு வந்தனர். அவர்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நுழைவாயில் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பெரியகடை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
நன்றி: இந்து தமிழ் (டிசம்பர் 4, 2020)