பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்.

7, பிப்ரவரி 2022

திருமதி. ஹெஸ்தர் தங்கையா:
மறைந்த போதகர் A.R தங்கையா அவர்களின் மனைவியும் பாஸ்டர் டட்லி தங்கையா, பாஸ்டர் பால் தங்கையா ஆகியோரின் தாயாருமாகிய திருமதி. ஹெஸ்தர் காந்திமலர் தங்கையா அவர்கள் தனது முதுமையின் காரணமாக ஞாயிறு (06.02.2022) அன்று இரவு கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்கள். 1932 ம் ஆண்டு அக்டோபர் 09 அன்று பிறந்த இந்த தாயாருக்கு தற்போது வயது 90.

தாயாரின் ஆரம்ப ஊழியம்:
திருமதி ஹெஸ்தர் தங்கையா இலங்கை தேசத்தை சேர்ந்தவர். அங்கே தனது கணவருடன் இயேசுவை அறியாத ஒரு குக்கிராமத்தில் ஊழியம் செய்து ஒரு சபையை நிறுவினார். இரு ஆண் பிள்ளைகள், இரு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த இவர்கள் அந்நாட்களில் கொடிய வறுமையின் நடுவே தன் ஆறு பிள்ளைகளுக்கு விசுவாசத்தையும், ஜெபத்தையும் மட்டுமே உணவாக ஊட்டினர்.

இலங்கையிலிருந்து இந்தியா:
தேவனுடைய நடத்துதலின்படி 1977ம் ஆண்டு இலங்கை தேசத்திலுள்ள யாழ்பாணத்திலிருந்து முழு குடும்பமாக ஆறு பேரும் இந்தியாவிற்கு வந்தனர். வெறும் 20 டாலர்கள் (இந்திய மதிப்பில் 1400 ரூபாய்) மட்டுமே அவர்கள் கையில் இருந்தது.

தென்தமிழகத்திலுள்ள மதுரையில் குடும்பமாக தங்கியிருந்த ஆரம்பநாட்களில் அசெம்பிளிஸ் ஆஃப் காட் என்னும் பெந்தேகொஸ்தே ஸ்தாபனத்திலும் பின்னர் தேவ சித்தத்தின்படி தனியாகவும் ஊழியத்தை செய்து வந்தனர்.

பிள்ளைகளை போதகர்களாக்கிய தாய்:
திருமதி ஹெஸ்தர் தங்கையா அவர்கள் தனது நான்கு பிள்ளைகளையும் பயபக்தியிலும், வேதாகம நல்லொழுக்கத்திலும் நேர்த்தியாக வளர்த்தார்கள். தன் கணவரின் இறப்புக்கு பின்னரும் தன் குடும்பத்திற்கு விசுவாச தாயாக செயலாற்றி வந்தார்கள்.

இதன் விளைவாக நான்கு பிள்ளைகளும் ஊழியத்திற்கு தங்களை அர்ப்பணித்தனர். முத்த மகன் பாஸ்டர். டட்லி தங்கையா அவர்கள் தேவ அழைப்பை பெற்று மதுரையில் புதுவாழ்வு ஊழியங்கள் என்ற பெயரில் மாபெரும் சபையை நிறுவி ஆயிரக்கணக்கான விசுவாசிகளையும், நூற்றுக்கணக்கான ஊழியர்களையும் உருவாக்க தேவன் பயன்படுத்தினார்.

இளைய மகன் பாஸ்டர் பால் தங்கையா அவர்கள் தேவ அழைப்பை பெற்று பெங்களூரு பட்டணத்திற்கு சென்று எளிய முறையில் பூரண சுவிசேஷ ஏஜி சபையை நிறுவினார். இன்று மாபெரும் திருச்சபையாக அது வளர்ந்துள்ளது.

90 வருட நல்வாழ்வு:
பிரபலமான இரண்டு போதகர்களை பெற்றெடுத்த தாயார் ஹெஸ்தர் காந்திமலர் தங்கையா (1932 -2022) அவர்கள் தனது 90 வருட வாழ்நாளில் தேவனை மட்டுமே முன்னிறுத்தி விசுவாச வாழ்வினை வாழ்ந்து நித்திய இளைப்பாறுதலுக்குள் சென்றிருக்கிறார்கள். தாயாரின் நல் வாழ்வுக்காக தேவனை துதிப்போம்.

நல்லடக்க ஆராதனை:
திருமதி ஹெஸ்தர் காந்திமலர் தங்கையா அவர்களின் நல்லடக்க ஆராதனை 08, பிப்ரவரி 2022 அன்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு பட்டணத்திலுள்ள பூரண சுவிசேஷ ஏ.ஜி சபையின் சார்பில் கன்னூரு ஓசூர் பிரதான சாலையில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயாரை இழந்து வாடும் குடும்பத்தார், விசுவாசிகளின் ஆறுதலுக்காக ஜெபியுங்கள். நன்றி