அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

அந்த தீர்மானத்தில், மாநாட்டின் வாயிலாக தமிழகத்தில் தொடர்ந்து ஊழியம் செய்வதற்கும், ஊழியம் செய்யப்படும் நேரங்களில் தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், கிறிஸ்தவ தலித் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து விதமான சலுகைகளையும் தொடர்ந்து அரசு வழங்கிட வேண்டும். கிறிஸ்தவர்களின் புனித இடமாக கருதும் ஜெருசலேம் தேவாலயத்திற்குச் செல்வதற்கான சலுகைகளை தமிழக அரசு அதிகப்படுத்தி தரவேண்டும். 

கிறிஸ்தவ கோவில்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை அடிக்கடி பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, எனவே, இந்த தாக்குதல்களை தடுத்துநிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சேவைப் பணிகளுக்கு தமிழக அரசு ஆதரவையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு, ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. வருகின்ற தேர்தலில் நாங்கள் எந்த ஒரு கட்சியும் சார்ந்து இருக்காமல், கிறிஸ்தவர்கள் நலன் கருதி அவர்களுடைய விருப்பப்படியே வாக்களிக்க இந்த கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

நன்றி: நக்கீரன் Published on 13/02/2021