இன்று முதல் (14.10.2021) தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுவதுமாக திறந்திருக்க தமிழக அரசு அதிரடியான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் மத வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்த வண்ணம் இருந்தனர். இந்த வேண்டுகோளை பரிசீலித்து தமிழக அரசு தற்போது மிக முக்கியமான இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.631, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 05.10.2021-ன்படி. 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும். தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 13-10-2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் தமிழக்முதல்வர் கேண்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக நாம் எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பு கிறிஸ்தவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நல்ல செய்தியை உங்கள் போதகர், உங்கள் விசுவாசிகள் என அனைவருக்கும் உடனே பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஆலயத்திற்கு வரும் போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசிணி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவைகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி