லண்டனை சேர்ந்த பிரபல தமிழ் போதகர் நித்திரையடைந்தார்.

தமிழகத்தை சேர்ந்தவரும் லண்டன் குயவனின் மாளிகை ஊழியங்களின் ஸ்தாபகருமான பாஸ்டர். ஆபிரகாம் சார்லஸ் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்துள்ள செய்தி கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 49 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
அற்புத விடுதலை ஊழியங்களில் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த பிரபல போதகர் சார்லஸ் ஆபிரகாம் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து குவைத் தேசத்தில் பல இடங்களில் ஊழியத்தை முடித்து, கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தியா வந்திருந்தார்.

திட்டமிட்டபடி இந்தியாவிலும் சில இடங்களில் தேவனுடைய ஊழியத்தை செய்து வந்த நிலையில் நேற்று சென்னையில் அவர் தனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்த அறையில் 11, ஜூன் 2022 (சனிக்கிழமை) அன்று காலை 7 மணியளவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நித்திய இளைப்பாறுதலுக்கு சென்றுள்ளார்.
தமிழகத்தில் ஊழியத்தை நிறைவு செய்த பின், மலேசியாவில் பல மாகாணங்களில் சிறப்பு கூட்டங்களில் பங்கேற்று ஊழியம் செய்ய இருந்த நிலையில் ஏற்பட்ட இந்த நிகழ்வு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாரது நல்லடக்க ஆராதனை சென்னையில் திங்கள் கிழமை அன்று நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளது. போதகரை இழந்து வாடும் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது ஊழியத்தை சேர்ந்தவர்களை நம் ஜெபத்தில் தாங்குவோம். தேவன் அவர்களை ஆறுதல்படுத்துவாராக.

