கோட்டயம்: கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதமாற்ற வலையில் வீழ்த்த முயற்சிக்கின்றனா் என்று கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டியுள்ளாா். அவரது இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10th September 2021 01:23 AM

கோட்டயம் மாவட்டம் குறுவிலங்காட்டில் அண்மையில் நடைபெற்ற கிறிஸ்தவ நிகழ்ச்சியில் ஸீரோ-மலபாா் தேவாலயத்தைச் சோ்ந்த பேராயரான ஜோசஃப் கள்ளரங்காட்டு இது தொடா்பாகப் பேசியதாவது:

கேரளத்தில் ஆயுதத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்ய முடியாது. எனவே, மாற்று மதப் பெண்களை குறிவைத்து முக்கியமாக கிறிஸ்தவப் பெண்களைக் குறிவைத்து லவ் ஜிகாத் நடைபெறுகிறது. காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து மதமாற்றம் செய்வது, போதைப்பொருள் பயன்படுத்த பழக்கப்படுத்துவது உள்ளிட்டவற்றை சிலா் கையாண்டு வருகின்றனா். அவா்களைக் காதல் வலையில் சிக்க வைத்து மதமாற்றுவது மட்டுமல்லாமல், பயங்கரவாத செயல்கள் உள்ளிட்ட நாச வேலைகளுக்கும் நமது பெண்களைப் பயன்படுத்த முயலுகின்றனா்.

இது போன்ற ஜிகாதிகளின் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மதவாதத்தை தூண்டுவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது, சகிப்பின்மை போன்றவற்றை கேரளத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே இதுபோன்ற நபா்கள் தூண்டி வருகின்றனா். பிற மதத்தினரை அழிப்பதற்கு அவா்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனா்.

ஜனநாயக நாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்தி பிற மதத்தை அழிக்க முடியாது என்பதால், அவர்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய பிற வழிகளைப் பயன்படுத்துகின்றனா்.

கேரள மாநிலம் மத பயங்கரவாதத்துக்கு ஆள் சோ்க்கும் மையமாக உருவெடுத்து வருகிறது. பயங்கரவாத அமைப்புகளின் ஸ்லீப்பா் செல்கள் இங்கு அதிகரித்து வருகின்றனா் என்று முன்னாள் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா ஏற்கெனவே எச்சரித்துள்ளாா்.

இங்கு காதல் என்ற பெயரில் மூளைச்சலவை செய்யப்பட்ட கிறிஸ்தவ மற்றும் ஹிந்து மத பெண்கள், மதமாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தானில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது மிகவும் கவலையளிக்கக் கூடிய பிரச்னை. வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு நமது பெண்களை எப்படி கொண்டு செல்ல முடிகிறது என்பது தெரியவில்லை.

கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த இளம் பெண்கள் இதுபோன்று ஏமாற்றுபவா்களின் வலையில் அதிகம் விழுகிறாா்கள். இதுபோன்ற நபா்களை நாம் இனம் கண்டு விலகியிருக்க வேண்டும். அரசியல்வாதிகள், சமூகத் தலைவா்கள், ஊடகத்தினா் இதில் உள்ள உண்மைகளை ஏற்க மறுக்கின்றனா். ஏனெனில், இதில் அவா்களுக்கு மறைமுக ஆதாயம் உள்ளது என்றாா் அவா்.

Thanks: dinamani