இயேசு கிறிஸ்துவுக்கு தண்டனை வழங்கிய பொந்தியு பிலாத்து பாேல சாத்தான்குளம் வழக்கில் செயல்பட முடியாது என்று பைபிளை மேற்கோள்காட்டி நீதிபதிகள் பேசியுள்ளனர்.
சாத்தான்குளத்தில் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சம்பவத்தை உயர்நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி அமர்வு நேற்று உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது, இப்பொழுது நாங்கள் செயல்படாவிட்டால் அது மிகுந்த கால தாமதம் ஆகிவிடும். இந்த உத்தரவை பிறப்பிக்க ஏன் இவ்வளவு காலம் என்று சிலர் நினைக்கலாம். பெருவாரியான மக்களின் குரலை கேட்டு அதன் அடிப்படையில் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது. மக்களின் மனதில் இருந்து ஒரு விஷயம் எளிதில் மறைந்து விடும். ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் எளிதில் மறைந்துவிடாது. அது நிலைத்து நிற்கும்.
பைபிளில் பொந்தியு பிலாத்து என்ற தேசாதிபதி (ரோமன் கவர்னர்) பெருவாரியான மக்களின் கூச்சலுக்கு கீழ்ப்படிந்து இயேசு கிறிஸ்துவை சிலுவையில் கொலை செய்ய ஒப்புக் கொடுத்துவிட்டு, அந்தப் பாவத்தில் தனக்குப் பங்கில்லை என்று தன் கைகளை கழுவிக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
பிலாத்து போல இந்த நீதிமன்றம் இருக்க முடியாது. போதிய ஆதாரங்கள் இல்லாமல் மக்கள் சொல்கிறார்கள் என்பதற்காக இந்த நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் அவசரப்பட்டு பதிவிட முடியாது. இப்போது இந்த உத்தரவுகளை பிறப்பிக்க போதிய முகாந்திரம் கிடைத்துவிட்டது. இறந்தவர்கள் உடலில் காணப்பட்ட காயங்கள், உறுதிப்படுத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை, நீதித்துறை நடுவரின் அறிக்கை, தலைமை காவலர் திருமதி ரேவதியின் வாக்குமூலம் ஆகியவற்றையெல்லாம் பார்க்கையில் இருவரையும் தாக்கிய காவலர்கள் மீது இபிகோ பிரிவு 302 கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பது தெரிகிறது.
எனவே டிஎஸ்பி அனில்குமாரை விசாரணை அதிகாரியாக நியமிக்கக்க முடிவு செய்துள்ளோம். அவரது கடந்த கால செயல்பாடுகளை நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே அவரை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் அனில்குமார் இரண்டு பேர்களின் குடும்பத்தினர்களின் கண்களிலிருந்து புரண்டு ஓடி வரும் கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி விசாரித்து அவர்கள் கண்ணீரை துடைக்கும் வகையில் நடந்து கொள்வார் என இந்த நீதிமன்றம் உறுதியாக நம்புகிறது.
அதுமட்டுமல்ல இந்த வழக்கை நீதிமன்றம் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பதையும் அவர் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் அனில் குமார் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணையை தீவிரப்படுத்தினர். 12 குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டது. 5 அதிகாரிகள் தலைமையில் சாத்தான்குளத்தில் முகாமிட்டு பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.
சாத்தான்குளம் வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில் இரண்டு பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு, சட்டப்பிரிவு 302 கீழ் கொலைமுயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் வழக்கில் பொந்தியு பிலாத்து போல் செயல்பட முடியாது என்று தைரியமாக கூறிய நீதிபதிகளை பாராட்டுகிறோம். நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். நீதிக்காக ஜெபிக்கிறோம்.
இந்த செய்தியை வீடியோவாக பாருங்கள்