18 டிசம்பர் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அரசு அறிவித்தபடி அனுசரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களின் அனைத்து உரிமைகளும் நிலைநாட்டப் பட வேண்டும் என்று கிறிஸ்தவ இயக்கங்கள் பலவற்றின் முன்னோடிகள் குரல் எழுப்புவதை அரசும் அனைத்து தரப்பினரும் கருத்தில் கொள்வது அவசியம்.
மதச்சார்பின்மை என்பது எழுத்திலும் ஏட்டிலும் மட்டுமின்றி அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.சமயக்கருத்துக்களை பொதுவெளிகளில் பகிர்வதை இந்திய அரசியல் சட்டம் அனுமதித்துள்ள நிலையில் வேண்டுமென்றே சிலர் எழுப்பும் பிரச்னைகளுக்கு வலுவூட்டி காவல்துறை வழக்குகளை பதிவு செய்து கிறிஸ்தவ மக்களை மிரட்டுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது.புகளூர் புன்னம் சத்திரம் அருகில் வேதாகமப்பகுதிகள் அடங்கிய கையேடுகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக் விநியோகம் செய்த கிறிஸ்தவ சகோதரர்கள் மற்றும் குழுவினரை மிரட்டி வழக்குத்தொடுத்த விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தில் சிறுபான்மையினரின் பரப்புரிமை கேள்விக்குள்ளாகியுள்ளதை மனசாட்சியுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.
மிகக் குறிப்பாக சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கொண்டாடும் நிலையில் கிறிஸ்தவ மக்களின் நெடுநாள் கோரிக்கையான ஊர் தோறும் கல்லறைத்தோட்டங்கள் தொடர்பான அரசு ஆணை வெளியிடப்பட்டிருந்தால் சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தை அது அதிக அர்த்தமுள்ள நாளாக்கியிருக்கும்.
கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு எதிரான அவசியமற்ற விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வழிபாட்டு உரிமைகள் நிபந்தனையற்ற முறையில் பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தால் ஊர் தோறும் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட ஏதுவுண்டாயிருக்கும்.
தமிழக அரசு நமது அரசு என்று போற்றிப் பாராட்ட சிறுபான்மையினரில் பெரும்பாலோனார் வைக்கும் இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.உரிமைக்கு குரல் கொடுத்து உறவுக்கு கை கொடுப்போம்.

  • தளபதிT. சாம் ஜெயபால்