குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை

குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் : கோப்புப்படம்

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 7 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் அமெரிக்கச் சர்வதேச மதச்சுதந்திரத்துக்கான ஆணையம் குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

அதில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராகவும், மற்ற உயரதிகாரிகளுக்கு எதிராகவும் தடை பிறப்பிக்க ஆலோசித்து பரிந்துரைப்போம்.

குடியுரிமைத் திருத்த மசோதா தவறான பாதையில், ஆபத்தை நோக்கிச் செல்கிறது. இந்தியாவின் பாரம்பரியமான மதச்சார்பற்ற தன்மைக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக இருக்கிறது. இந்த மசோதாவால் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது

” அமெரிக்கச் சர்வதேச மதச்சுதந்திர ஆணையத்தின் அறிக்கை வருத்தமளிக்கிறது. குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் எந்தவிதமான வழக்காடும் உரிமையும் இல்லாத அமெரிக்கச் சர்வதேச மதச்சுதந்திர ஆணையம், முழுமையான விவரங்களை அறியாமல், அனுமானங்களோடும், பாரபட்சத்தோடும் கருத்துத் தெரிவித்துள்ளது

கடந்த காலங்களிலும் அமெரிக்க மதச்சுதந்திர ஆணையம் இதுபோன்று கருத்துக்களை தெரிவித்திருப்பதால் இதில் வியப்பு ஏதும் இல்லை. அமித் ஷாவுக்கு தடை விதிக்க ஆலோசிப்போம் என்று கூறிய அமெரிக்க அமைப்பு கடந்த காலங்களில் குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்ததற்கு ஆதரவாக இருந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட ஒவ்வொரு நாடும் தங்களின் குடிமக்களை மதிப்பிடவும், கணக்கிடவும் தனிச்சிறப்பு வாய்ந்த கொள்கைகள் மூலம் நடத்த உரிமை இருக்கிறது.

சில நாடுகளில் வந்து இந்தியாவில் இருக்கும் மதரீதியான சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு இந்த மசோதா உரிமை வழங்குகிறது.

அகதிகளாக வரும் மக்களுக்கு நடைமுறையில் உள்ள சிரமங்களைக் களையவும், அவரின் அடிப்படை மனித உரிமைகளைப்பெறவும் இந்த மசோதா அனுமதிக்கிறது. இதுபோன்ற முன்னெடுப்புக்களை விமர்சிக்கக் கூடாது.
ஏற்கனவே குடியுரிமை பெற ஆர்வமாக இருக்கும் அனைத்து சமூகத்தினரின் செயல்பாடுகளை இந்த மசோதா பாதிக்காது.

குடியுரிமைத் திருத்த மசோதா அல்லது தேசிய குடிமக்கள் பதிவோடு ஆகிய இரண்டும் எந்த இந்தியக் குடிமகனின் நம்பிக்கையையும், குடியுரிமையும் பறிக்காது. இந்த விஷயத்தில் உங்களின் ஆலோசனைகள், ஊக்கங்கள் நியாயமற்றவை
இவ்வாறு ராவேஷ் குமார் தெரிவித்தார்

Thanks: The Hindu Tamil Thisai (10 Dec 2019)