covid 19

மாநிலம் முழுவதும் இதுவரை 600 கொரோனா உடல்களை அடக்கம் செய்துள்ள தமுமுக, மமகவினர் உதவி கோரி வருபவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்…

கோவையில் ஒரே நாளில் 2 கிறிஸ்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்களின் உடலை எந்தவிதமான மத வேறுபாடுகளுமின்றி தமுமுக, மமகவினர் நல்லடக்கம் செய்தனர். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற சேவையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரானா நோய்த் தொற்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய்த் தொற்று குணமாகாமலிருந்த நிலையில், அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பலியானார்.

இருவரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், இருவரின் உடலையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும், மனிதநேய மக்கள் கட்சியும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தது. இதற்காக இவர்கள் பணமோ, எந்தவிதமாகச் சலுகையும் எதிர்பார்ப்பதில்லை.

கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களை, நம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தீண்டத்தகாதவர்களாகச் சித்திரிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைத் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து காலி செய்யச் சொல்வது, என பல்வேறு உளவியல் ரீதியான தாக்குதலை முன்னெடுக்கிறார்கள்.

Thank you: tamil.samayam.com