சென்னை; 10, ஜனவரி 2022
சென்னை: தமிழகத்தில் ஜன 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளொன்றிற்கு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஏனைய நாட்களில் இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இருந்த போதிலும் கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி
- ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
- ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பொது,போக்குவரத்து, மெட்ரொ ரெயில் இயங்காது. மின்சார ரெயில்கள் ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி இயங்கும்.
- உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
- இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
- உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி
- 16-ம் தேதி, வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் நலன் கருதி பொது பேருந்துகளில் 75% பயணிகள் அனுமதி.
- முழு ஊரடங்கு நாளில் தடை செய்த/ அனுமதித்த இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
- பொது முடக்க காலத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு:
ஜனவரி 14 முதல் 18 ம் தேதி வரை நமது திருச்சபைகளில் பொதுமக்களின் வருகையை அனுமதிக்க வேண்டாம். திட்டமிட்ட கூடுகைகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடுங்கள்.
நோய் தொற்று உள்ள இக்காலத்தில் வியாதியோடு போராடுபவர்களை நேரில் சந்தித்து ஜெபிப்பதை தவிர்த்து, போன் மூலம் ஜெபிப்பது நல்லது.
அத்தியாவசியமான காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவதை வழக்கமாகவும், பழக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.
மக்கள் பணி செய்யும் தூய்மை பணியாளர் முதல் ஆட்டோ ஓட்டுனர், கடைகளில் வேலை பார்ப்பவர்கள் என மக்களோடு தொடர்புடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் நம்மில் பலர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உங்கள் விசுவாசத்தை மதிக்கிறோம். ஆயினும் விழிப்புணர்வும் விவேகமும் அவசியமானதுதானே.
விசுவாசிகளே, இக்கால சூழ்நிலையை மனிதில் கொண்டு உங்கள் போதகரை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் சிறப்பு விசேஷ நிகழ்ச்சிகளை கூடுமானவரை சற்று ஒத்திவையுங்கள். அவசியமான நிகழ்வுகளுக்கு போதகரை அழைக்கும் போது அவரது பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
கடந்த காலங்களில் நமது நாட்டில் ஆயிரக்கணக்கான போதகர்களையும், விசுவாசிகளையும் இழந்துவிட்டோம். இனி ஒருவரை கூட நாம் இழந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாயிருங்கள்.
சபையாக ஜெபிப்போம், ஞானத்துடன் திட்டமிடுவோம், விழப்புணர்வுடன் நடந்துகொள்வோம்.
இந்த செய்தியை நீங்கள் வாசித்தப்பின் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் பயனடையட்டும்