நீண்ட இடைவெளிக்குபின் முதன் முறையாக திரையில் தோன்றி பேசிய பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களின் உயிருள்ள சாட்சி

ஆவடி 28, ஜூன்

சென்னை ஆவடியில் அமைந்துள்ள அப்போஸ்தல கிறிஸ்தவ தேவசபையின் தலைமை போதகர் பாஸ்டர் தாமஸ்ராஜ் ஐயா அவர்கள் கடந்த ஆண்டு தனது சரீரத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பெலவீனத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று, ஆக்ஸிஸன் தட்டுப்பாடு என மரணத்திற்கேதுவாக பாதிக்கப்பட்ட இவருக்கு உயர்தரமான அதிதீவிர சிகிச்சையளிக்க மருத்துவர்கள் போராடினர். ஒருகட்டத்தில் மருத்துவர்களே கைவிட்ட சூழ்நிலையில் உலகமுழுவதிலிருந்து ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது.

இரவு பகல் பாராது பல சபைகளில் உபவாச ஜெபங்கள் பிரத்தியேகமாக ஏறெடுக்கப்பட்டது. போதகரின் மகன் பாஸ்டர் காபிரியேல் தாமஸ்ராஜ் அவர்கள் தனது தந்தையின் உடல் நிலை குறித்த விபரங்களை அவ்வப்போது ஜெபத்திற்காக வெளியிட்டு, ஞாயிறு ஆராதனை நேரங்களில் ஜெபிக்கும்படி பிரத்யேக அழைப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி அனைத்து பகுதிகளிலுமுள்ள ஞாயிறு ஆராதனைகளில் சிறப்பு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது.

ஜெபத்தை கேட்கும் தேவன் பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களின் மரண படுக்கையை நீக்கி, கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப செய்தார். மருத்துவர்களே ஆச்சரியப்படத்தக்க தேவன் மாபெரும் அற்புதத்தை செய்து தனது மகத்துவத்தை வெளிப்படுத்தினார்.

வீடு திரும்பிய போதகர் தாமஸ்ராஜ் அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். போதகரை நேரில் சந்திக்க முடியாத நிலை இருப்பினும் தொடர்ந்து அவருக்காக ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டு வந்தது. போதகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை போதகரின் புகைப்படமோ அல்லது வீடியோவோ வெளியாகாத நிலையில் போதகரை காண உலகெங்கும் ஆர்வம் அதிகரித்தது.

இந்நிலையில் போதகர் தாமஸ்ராஜ் அவர்கள் 28 ஜீன் 2021 அன்று தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் தனக்காக உலகமெங்கிலுமிருந்து ஜெபித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக முதன் முறையாக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆன்லைன் மூலமாக மக்களோடு உறையாடியுள்ளார்.

பல மாதங்களுக்கு பின் நல்ல ஆரோக்கியத்தோடு போதகரின் முகத்தையும், அவரது குரலையும் கேட்ட பலர் ஆனந்த கண்ணீருடன் தேவனை மகிமைப்படுத்தி வருகின்றனர்.

நீங்களும் இந்த உயிருள்ள சாட்சியை கீழேயுள்ள காணொளியில் பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் மறவாமல் இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள். நம் தேவன் நல்லவர்.


தொடர்ந்து போதகர் அவர்களுக்காக ஜெபிப்போம். மறுபடியும் சபை நடுவே தேவன் கொண்டு வந்து சிங்கத்தைப்போல தைரியமாய் பிரசங்கிக்க கிருபை தருவாராக.. ஆமென்


சமீபத்திய செய்தியை வாசியுங்கள்:

தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு