
கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாக அமைந்த ஒரு ஃபேஸ்புக் பதிவு குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று (மார்ச் 20) தெரிவித்தார்.
கூறப்பட்ட கருத்துகள் அவ்விரு சமயத்தினரையும் தாக்குவதாக அமைந்துள்ளதால் சிங்கப்பூரில் உள்ளோர் இப்பதிவை இனி பார்க்க முடியாத வண்ணம் முடக்கிடுமாறு அதிகாரிகள் ஃபேஸ்புக் தளத்தைக் கேட்டுக்கொண்டனர்.
“இதுபோன்ற கருத்துகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். பல இன, பல சமய சூழல் கொண்ட சிங்கப்பூரில் இத்தகைய கருத்துகளுக்கு இடமில்லை,” என்றார் அமைச்சர் சண்முகம்.
‘என்யுஎஸ் ஏத்தியிஸ்ட் சொசைட்டி’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கிறிஸ்தவ வேத நூலான பைபிள் மற்றும் இஸ்லாமிய வேத நூலான குர்ஆன் ஆகியவற்றைக் காட்டும் படம் நேற்று முன்தினம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதனுடன் ‘கழிவறைத் தாளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் பயன்படுத்திக்கொள்ள’ எனப் பொருள்படும் சொற்களும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இப்பதிவு குறித்து பல புகார்கள் கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூர் இணையவாசிகளுக்கு பதிவைப் பார்ப்பதற்கான அனுமதி தடைசெய்யப்படுவதற்கு முன் பலர் இப்பதிவை வெகுவாக விமர்சித்திருந்தனர்.
போலிசார் இதன் தொடர்பில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
“இணையத்தில் கருத்துகளைப் பதிவிடும்போது கவனத்துடன் இருக்குமாறு போலிசார் நினைவூட்டினர். சிங்கப்பூரில் இன, சமய ஒற்றுமையைக் குலக்கும் விதமான கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டது. இன, சமய அடிப்படையில் இணையத்தில் வெறுப்புணர்வு பேச்சுக்கு சிங்கப்பூரில் இடமில்லை என்றும் அது குறிப்பிட்டது.
இதற்கிடையே, சுமார் 1,000 பேர் பின் தொடரும் அந்த ஃபேஸ்புக் பக்கம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் எந்த ஒரு அமைப்புடனும் அதிகாரபூர்வமாகத் தொடர்புடையது அல்ல என்றும் அந்தப் பல்கலைக் கழகத்தில அதிகாரபூர்வ ஆத்திகர் அமைப்பு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#சிங்கப்பூர்
Thank you: tamilmurasu.com