கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்களில் பொதுமக்கள் இரவு வழிபாடு நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  வடக்கு மண்டலத்தில் 280 செல்போன்கள், மேற்கு மண்டலத்தில் 175 செல்போன்கள், தெற்கு மண்டலத்தில் 205 செல்போன்கள், கிழக்கு மண்டலத்தில் 203 செல்போன்கள் என ரூ.1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்கள் வழங்கினார்.

அப்போது, தலைமையிட  கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அருண், தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன், வடக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பின்னர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:“சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் கடற்கரை சாலைகளில் யாரும் நுழையாதபடி தடுப்பு அமைக்கப்படும்.  சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது. பைக்குகளில் சாலையில் கும்பலாக வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த ஆண்டு புத்தாண்டை வீடுகளிலேயே தங்களது குடும்பத்துடன் கொண்டாட வேண்டும். அன்றைய தினத்தில் சென்னை முழுவதும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்களில் இரவு வழிபாடு நடத்த காவல் துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். தேவாலயம் எங்கு உள்ளது. எவ்வளவு பேர் வழிபாட்டிற்கு வருவார்கள் என்பது தொடர்பாக காவல் துறை ஆய்வு செய்த பிறகே முறையாக அனுமதி வழங்கப்படும். அதேபோல், புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபாடு நடத்துவது குறித்து இந்து அறநிலையத்துறையிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினகரன்