கேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை

கேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொச்சி:

கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2017ல் அளித்த தீர்ப்பில் ‘ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்ச் மற்றும் சொத்துக்கள் மலாங்கரா ஆர்த்தோடக்ஸ் சிரியன் சர்ச் பிரிவினருக்கு சொந்தமானது’ என தீர்ப்பு அளித்தது.

ஆனால் இந்த தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எதிர் தரப்பினர் மீது ஜேக்கபைட் சிரியன் கிறிஸ்துவ சர்ச் பிரிவினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுக்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக முதல்வர் பினராயி விஜயன் அரசு பல முயற்சிகளை எடுத்தது. தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் இந்தக் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார். ஆர்த்தோடக்ஸ் பிரிவினருடன் நேற்று முன் தினமும் ஜேக்கபைட் பிரிவினருடன் நேற்றும் அவர் பேச்சு நடத்தினார். டில்லியில் பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து மிசோரம் கவர்னர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை இருகுழுவினருக்கும் நேற்று மதிய உணவு விருந்து அளித்தார்.

‘இந்தப் பேச்சு சுமுகமாக நடந்தது. அனைத்து விஷயங்களையும் பிரதமர் மோடி கூர்ந்து கேட்டறிந்தார். விரைவில் சரியான தீர்வு ஏற்படும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என இரண்டு குழுக்களும் தனித்தனியாக வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளன.

(டிச 30, 2020) நன்றி: தினமலர்