கடந்த இரண்டாயிரத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெருசலேமில் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதியை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனையொட்டி திண்டுக்கல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 320 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில், உதவி பங்குத்தந்தை பிரிட்டோ, அருட்தந்தை அந்தோணி ஆகியோரால் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.  

இத்திருப்பலியின் நடுவே இரவு 12 மணிக்கு நடைபெற்ற இயேசு கிறிஸ்து பிறப்பு காட்சியில், பழைய ஏற்பாடு கால உடன்படிக்கை பெட்டகத்தில் இருந்து, இயேசு கிறிஸ்து பிறப்பது போல், வித்தியாசமாக அமைக்கப் பட்டிருந்தது. அக்காலத்தில் (இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பழைய ஏற்பாடு காலம்) இஸ்ரேல் நாட்டில்  ஏற்பட்ட கொடிய நோய், பஞ்சம் மற்றும் வறுமையை ஒழிப்பதற்காகப் பழைய ஏற்பாடுகால உடன்படிக்கை பெட்டகத்தினை தேவாலயத்தில் இருந்து வெளியே எடுத்து வந்து இஸ்ரேல் நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பகுதிகளில் கொடிய நோய் ஒழிந்து, மக்கள் செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர். எனவே தற்போது ஏற்பட்டிருக்கும் கொடிய கரோனோ நோயை ஒழிப்பதற்காக,  பழைய ஏற்பாடுகால உடன்படிக்கை பெட்டகத்திலிருந்து இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், அந்தப் பெட்டகத்தின் மேலே வைக்கப்பட்டிருந்த பூக்கள் இயேசு கிறிஸ்துவின் தாய் மரியன்னையின் புனிதத் தன்மையையும், பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றையும் குறிப்பதாகவும் அமைக்கப்பட்டிருந்தது.

இயேசு கிறிஸ்து பிறப்புக் காட்சியின் போது, திருப்பலியில் பங்கேற்றவர்கள், தங்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து, மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். நள்ளிரவில் நடைபெற்ற இத்திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நன்றி: நக்கீரன்