
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தலில் உச்ச கட்ட குளறுபடி
Thanks: instanews
22 Oct 2021 2:07 AM GMT

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் முறைகேடு நடந்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு தேர்தல் ரத்து என போராயர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் விதிகளின்படி பொறுப்பேற்றுக் கொண்டதாக ஓரு தரப்பினரும், இறுதி கட்ட தேர்தலில் முறைகேடு நடந்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு தேர்தல் ரத்து என போராயர் அறிவிப்பு. மீண்டும் குழப்பம் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஐ தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கி, பல்வேறு கட்டங்களை கடந்து நேற்று 20 தேதியுடன் நிறைவு பெற்றது. நாசரேத்தில் வைத்து இறுதி கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணியும் நடந்தது. தேர்தலில் போட்டியிட்ட டி.எஸ்.எப் அணி, எஸ்.டி.கே.ராஜன் அணிகளில் டி.எஸ்.எப் அணி வெற்றி பெற்றதாக பேராயர் அறிவித்தார். இன்று தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்தில் வைத்து பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை வெற்றி பெற்றவர்கள் அங்கு சென்றபோது, பேராயர் உள்பட யாரும் அங்கு இல்லை. இதனால் ஆத்திரமடைந்த புதிய நிர்வாகிகளை சேர்ந்த ஆதரவாளர்களுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அங்கு வந்த போலீசார், ஓட்டுப்பெட்டியை அங்குள்ள அறையில் வைத்து பூட்டிவிட்டு அனைவரையும் வெளியேற்றினர். ஆனால் புதிய நிர்வாகிகள் வெளியேற மறுத்து அங்கேயே தங்கியிருந்தனர். மாலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை வரை பேராயர் உள்பட யாரும் அங்கு வரவில்லை.
இதற்கிடையே செய்தியாளர்களை வரவழைத்த டி.எஸ்.எப் அணியினர், விதிகளின்படி உப தலைவர் மூலம் தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், முதல் செயற்குழு கூட்டத்தையும் கூட்டிவிட்டதாகவும் தெரிவித்தனர். பேராயர் எதற்காக வரவில்லை என்று கேட்டதற்கு, இன்று மாலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்துவோம் என்று பேராயர் நேற்றிரவே சொல்லியிருந்தார். ஆனால் அவரை எதிரணியினர் இங்கு வரவிடாமல் தடுத்து விட்டனர் என்றே தெரிகிறது. விதிப்படி நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். எங்கள் பணியை நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்” என்றார்கள்.
இதற்கிடையே இறுதி கட்ட தேர்தலின் போது முறைகேடு நடந்தது குறித்து வீடியோ ஆதாரத்தை குறிப்பிட்ட பேராயர் தேவசகாயம், 20ம் தேதி நடந்த தேர்தலை ரத்து செய்வதாகவும், மறுதேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட டி.எஸ்.எப் அணியின் வெற்றி செல்லாமல் போனது. மீண்டும் இறுதிகட்ட தேர்தலில்தான் இவர்கள் மோதியாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனாலும் சிலர், ஏற்கனவே வெற்றி பெற்றதாக அறிவித்த பேராயர், அவரே எப்படி ரத்து செய்வதாக அறிவிக்க முடியும் ? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இதனால் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் மீண்டும் குழுப்பம் நிலவி பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.