தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்துள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் சுவிசேஷகராக பணியாற்றி வந்த சகோ. சகோ.அப்பாத்துரை அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு  சனிக்கிழமை 06, பிப்ரவரி 2021 அன்று இரவு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். 1949 ஜனவரி 10 ம் தேதி பிறந்த இவருக்கு வயது 72.



இந்த சம்பவம் கிறிஸ்தவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோ. அப்பாத்துரை அவர்கள் பல ஆண்டுகளாக சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களோடு இணைந்து இறை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயேசு கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். கிறிஸ்துவையும் கிறிஸ்தவர்களையும் வெறுத்து வேதாகமத்தை தூக்கி எறிந்தவர். இவரது இரட்சிப்பிற்காக இவரது மனைவி எட்டு ஆண்டுகள் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தார். அந்த ஜெபம் வீண்போகவில்லை.

சகோ அப்பாத்துரை அவர்கள் ஒரு தேசிய வங்கியில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர். எனினும் வாழ்வில் நிம்மதியில்லாமல் தற்கொலைதான் தீர்வு என முயர்ச்சித்த தருணத்தில் தான் அவர் வெறுத்த இயேசு கிறிஸ்து அவரை சந்தித்து அவரது வாழ்வை மாற்றினார். பின்னர் முழு நேர சுவிசேஷச ஊழிய அழைப்பை பெற்று இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

உலகின் ஐந்து கண்டங்களுக்கும் சென்று பல கோடிக்கணக்கான மக்களை இரட்சிப்புக்குள் வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்நாளின் இறுதிவரை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் பணியை செய்து முடித்து இன்று இளைப்பாற சென்றிருக்கிறார்

இவரது வாழ்வில் தாழ்மை, உண்மை, பொறுமை, சகிப்புதன்மை, சாட்சியுள்ள வாழ்க்கை என்னும் பல உயரிய குணாதிசயங்களை காண முடியும்.

தான் சேவித்து வந்த கிறிஸ்துவை முகமுகமாய் சந்திக்க சென்ற சகோ. அப்பாத்துரை அவர்களின் இழப்பு என்பது தமிழ் கிறிஸ்தவ சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. ஒவ்வொருவரையும் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் ஆறுதல்படுத்துவாராக.. ஆழ்ந்த அனுதாபங்கள்.

முக்கிய குறிப்பு:
சகோ. A. அப்பாத்துரை அவர்களது நல்லடக்க ஆராதனை வருகிற 8ம் தேதி திங்கள் கிழமை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாந்தி நகர் C.S.I திருச்சபையில் காலை 9 மணியளவில் நடைபெறும் என இயேசு விடுவிக்கிறார் ஊழிய ஸ்தாபன நிறுவனர் சகோ. மோகன் சி லாசரஸ் அறிவித்துள்ளார்