மதுரை, இந்தியா
28, நவம்பர் 2021

உலகிலேயே தமிழ் மொழிக்கான தனித்துவமான அச்சுக்கூடம் புன்னைக்காயலில் தான் அமைக்கப்பட்டதை வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிசெய்து யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் வரலாற்று பதிவு சான்றிதழை வழங்கியுள்ளது.

முதல் அச்சுக்கூடம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள புன்னைக்காயல் என்ற கடற்கரை கிராமத்திற்கு தொன்மைவாய்ந்த வரலாற்று பெருமைகள் ஏராளம் உள்ளது. அந்தவகையில் உலகிலேயே தமிழ் மொழிக்கான தனித்துவமான அச்சுக்கூடம் புன்னைக்காயலில் தான் அமைந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிசெய்து யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Universal Achievers Book of Records) என்ற அங்கீகரிக்கப்பட்ட உலக சாதனை நிறுவனம் வரலாற்று பதிவு சான்றிதழை வழங்கியுள்ளது.

உலக சாதனை வரலாற்று நிகழ்வு:

மதுரையிலுள்ள தனியார் மண்டபத்தில் பிரமாண்டமான உலக சாதனை வரலாற்று நிகழ்வு இன்று (27.11.2021) நடைபெற்றது. யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை பதிவு நிறுவனம் பல்வேறு துறைகளில் சாதித்த 12 பேருக்கு உலக தரச் சான்று பதிவு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.. விழாவில் இந்தியாவிலேயே அதிகமான முறை கின்னஸ் சாதனைகள் புரிந்த, உலக சாதனை நீதிபதி டாக்டர். பாபு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உலக சாதனைக்கான அங்கீகார பதிவு சான்றிதல் உட்பட பதக்கங்களை வழங்கினார்.

முதல் அச்சுக்கூடம் அமைக்கப்பட்ட புன்னைக்காயல்:

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் தான் உலகிலேயே தமிழ் மொழிக்கான தனித்துவமான முதல் அச்சுக்கூடம் இயேசு சபையை சார்ந்த அருட்தந்தை ஹென்றிக் அடிகளார் அவர்களால் 16 நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை பிரபல வரலாற்று அறிஞர்கள் தங்களது நூல்கள் மற்றும் கடிதங்களில் குறிப்பிடுள்ளனர்.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைப் பாதிரியார் ஹென்றி ஹென்றிக்ஸ் 1578 இல் கொல்லத்தில் 16 பக்கங்கள் கொண்ட ‘தம்பிரான் வணக்கம்’ நூலை அச்சிட்டார். இதுவே தமிழில் அச்சான முதல்நூல். 1579 இல் கொச்சியில் ‘கிரிசித்தியானி வணக்கமும்’, 1580 இல் ‘கொம்பெசியோனாரு’ நூலும் இவராலேயே அச்சிடப்பெற்றன.

1586 இல் அண்டிரிக் அடிகளாரால் தமிழக எல்லைக்குள் முதன் முதலில் புன்னைக்காயலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது. இந்த அச்சுக்கூடத்தில் “Flos Sanctorum” (அடியார் வரலாறு) என்ற 670 பக்கங்கள் கொண்ட நூல் அச்சிடப்பட்டது. தமிழ் மொழியில் நான்கு நூல்களை அச்சிட்ட அண்டிரிக் அடிகளாரை ‘அச்சுக்கலையின் தந்தை’ என்று அழைக்கின்றனர்.

வரலாற்றுப் பிழை:

1714 இல் சீகன்பால்கு ஐயரால் தரங்கப்பாடியில் தமிழ் மொழியில் விவிலியம் அச்சிடப்பட்டது. அங்கு அவர் காகிதப் பட்டறையையும் நிறுவினார். தமிழகத்தில் முதல் காகிதப் பட்டறை நிறுவப்பட்ட இடம் தரங்கம்பாடியே. மாறாக, தமிழ் முதன் முதலில் அச்சேறியது தரங்கம்பாடி எனத் தவறான தகவல் பாடநூல்களில் பதிவாகி உள்ளது.

தமிழ் மொழி தமிழக எல்லைக்கு அப்பால் முதலில் 1578இல் கேரளத்திலும், 1586 இல் தமிழக எல்லைக்குள் புன்னைக்காயலிலும் முதன்முதலில் அச்சேறியது என்பதை அரசு ஆவணங்களில் பதிவு செய்திட புன்னைக்காயல் ஊர்க் கமிட்டி, ஊரின் பற்றாளர்கள், எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து தமிழக முதல்வர், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்து முயற்சித்து வந்தனர்.

உலக சாதனைக்கு முயற்சி:

இதன் ஒரு பகுதியாக, உலக சாதனைகளைப் பதிவு செய்துவரும் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் பதிவு செய்யும்படி தங்களிடம் உள்ள சான்றுகளை ஒப்படைத்து புன்னைக் காயல் ஊர்க் கமிட்டி விண்ணப்பித்தது. ஆதாரப்பூர்வமான தரவுகளை நுட்பமாக ஆராய்ந்த உலக சாதனை நீதிபதிகள் குழு கடந்த 18ம் தேதி இதனை உறுதிசெய்து அதிகாரப்பூர்வமாக உலகில் தமிழுக்கென்று முதன்முதலில் 1586 இல் அச்சுக்கூடம் புன்னைக் காயலில் இருந்ததை உறுதிசெய்து அறிவித்தது.

இதன்படி இன்று (27 நவம்பர் 2011) நடந்த உலக சாதனை விழாவில் அருள்முனைவர் அமுதன் அடிகள், புன்னைக்காயல் ஊர் நிர்வாக தலைவர் உயர்திரு. அமல்சன், துறைமுகக் கமிட்டி தலைவர் திரு. நாதன், முனைவர் திரு. பெவிஸ்டன், எழுத்தாளர் நெய்தல் அண்டோ மற்றும் ஊர் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு, ஊர் சார்பாக உலக சாதனை அங்கீகார வரலாற்று பதிவு சான்றிதழ் மற்றும் கேடயத்தைப் பெற்றனர்.

தமிழறிஞர்களின் வேண்டுகோள்:

இந்த உலக சாதனை நிகழ்வின் வாயிலாக புன்னைக்காயலில் அமைக்கப்பட்ட அச்சுக்கூடம் இன்று உலக அரங்கில் பேச்சு பொருளாக மாறியுள்ளது. கூகுள் தேடுவிசையில் புன்னைக்காயல் என்ற கிராமத்தை அறிய பலர் தேடிவருகின்றனர். இந்த அங்கீகாரத்திற்கு பின் புன்னைக்காயல் சுற்றுத்தலமாக மாறுமா? வரலாற்று பெருமைகளை விளக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா என்ற கேள்வியும் பலரிடம் எழும்புகிறது.

உலக சாதனை நிறுவனம் புன்னைக் காயலில் அச்சுக்கூடம் இருந்ததை அங்கீகரித்துள்ள நிலையில், இனி தமிழகப் பாடநூல்களில் பிழைகள் திருத்தப்பட வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.

செய்தி பிரிவு: வித்யபிரகாஷ்


WORLD RECORD of BEING THE FIRST DEDICATED TAMIL PRINTING PRESS IN THE WORLD, BUILT IN PUNNAIKKAYAL BY REV. FR. HENRIQUE HENRIQUES (1520-1600) OF THE JESUIT MISSIONARIES (AKA. SOCIETY OF JESUS) IN THE 16TH CENTURY AND TO PRINT THE BOOK TITLED “FLOS SANCTORUM” (ADIYAR VARALAARU) IN TAMIL LANGUAGE IN 1586, AS CONFIRMED ON 18th NOVEMBER, 2021.