சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டி

Share this page with friends

சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டி

“…சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7).

சிலுவை காட்சியைத் தூர திருஷ்டியினால் கண்ட ஏசாயா, இயேசுகிறிஸ்துவை சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல் வாயைத் திறவாதிருக்கக் கண்டார். இயேசு கிறிஸ்து நமக்காக பாவம், சாபம், நோய்களை சுமந்து தீர்க்கும்படி தன்னை அமைதியாய் அர்ப்பணித்த ஆட்டுக்குட்டியாக விளங்கினார்.

இங்கிலாந்து தேசத்தில் ஒரு பெரிய ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் முன் சுவற்றில் ஒரு ஆட்டுக்குட்டியின் படம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன காரணமென்றால், 18-ம் நூற்றாண்டில் அந்த ஆலயம் கட்டப்படும்போது, நடந்த ஒரு சம்பவம் ஆகும். அந்நாளில் கோபுரத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வாலிபன் திடீரென்று பெரும் காற்று வீசியதால் நிலை தடுமாறி அங்கிருந்து கீழே விழுந்தான். கோபுரத்து உச்சியிலிருந்து அவன் விழுந்ததினால் எலும்புகள் எல்லாம் நொறுங்கி, இரத்த பெருவெள்ளத்தில் அவன் மரித்திருப்பான் என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள்.

ஆனால் அவன் விழுந்ததோ ஒரு ஆட்டுக்குட்டியின்மேல், அவன் விழுந்த வேகத்தை ஆட்டுக்குட்டி தாங்கிக்கொண்டு தன் உயிரைக் கொடுத்தது. ஆனால் அவனோ பிழைத்துக் கொண்டான். அவன் எழுந்து ஆட்டுக்குட்டிக்கு நன்றி செலுத்தினான்.

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்! அவரும் ஒரு ஆட்டுக்குட்டிதான். உங்களுடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, துக்கங்களைச் சுமந்த ஆட்டுக்குட்டி. உங்களுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்ட ஆட்டுக்குட்டி. உங்களுக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை தன்மேல் ஏற்றுக் கொண்ட ஆட்டுக்குட்டி. அப். பேதுரு எழுதுகிறார்: “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:19).

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர் தங்களுடைய பாவ நிவாரண பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டு வருவார்கள். அந்த ஆட்டின்மேல் தங்கள் கைகளை வைத்து, தாங்கள் கடந்த வருடங்களில் செய்த எல்லா பாவங்களையும், அக்கிரமங்களையும் அதன்மேல் சுமத்துவார்கள்.

அந்த ஆட்டுக்குட்டியோ சத்தமிடாமல், வாய் திறவாமல் அமைதியாய் நின்று கொண்டிருக்கும். பின்பு அந்த ஆட்டைப் பலிபீடத்தின்மேல் கிடத்திப் பலி செலுத்துவார்கள். அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ஆசாரியன் ஈசோப்பு தண்டிலே தோய்த்து, பாவம் செய்த மனுஷனின் மேல் தெளித்து, பாவமன்னிப்பைக் கூறுவான்.

இன்று, தேவகுமாரனாகிய இயேசு உங்களுக்காகப் பலியாகியிருக்கிறார். உங்கள் பாவமும் அக்கிரமமும் அவர்மேல் விழுந்தன. தேவபிள்ளைகளே, அந்த கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரிப்பீர்களா?

நினைவிற்கு:- “யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றார்” (யோவான் 1:29).


Share this page with friends