புதுமைப் பெண்ணா? குணசாலிப் பெண்ணா? மகளிர் தின சிறப்பு கவிதை

Share this page with friends

புதுமைப் பெண்ணா?!
குணசாலிப் பெண்ணா?!

தேவ வார்த்தைக்குக்
கீழ்ப்படியாமல்
சர்ப்பத்தின் வார்த்தைக்குச் செவிமடுத்து
பாவத்தைப் பிரசவித்தாள் ஏவாள்!
விளைவு –
அவள் பெற்ற பிள்ளைகளுள்
அப்பாவி ஒருவன் கொல்லப்பட்டான்!
படு பாவியானான் மற்றொருவன்!

ஆண்டவரின் வாக்கில் நம்பிக்கையற்று,
சந்ததி விளங்க
தன் அவசரப் புத்தியால்
ஆகாரை
ஆபிரகாமுக்குத் தந்தாள்
சாராள்!
விளைவு
தேவனுக்கு எதிராக
ஒரு சந்ததி உருவானது!

உப்புச் சப்பில்லா
உலகப் பொருள்களின் மீது
இச்சை கொண்டு
சோதோமைத் திரும்பிப் பார்த்தாள்
லோத்தின் மனைவி!
விளைவு-
யாரும் தீண்டாத
காட்சிப் பொருளாம்
உப்புத்தூணானாள்!

பெற்ற பிள்ளைகளிடம்
பாரபட்சம் காட்டினாள்
ரெபேக்கால்
விளைவு-
பிள்ளைகளுக்குள்
ஒற்றுமையைக் குலைத்து
விரோதிகள் ஆக்கினாள்!

சுதந்திரப் பறவையாய்
கூடுவிட்டுப் பறந்து
திரிந்தாள்
கூடாரவாசியான
தீனாள் !
விளைவு-
வாழ்வு சீரழிக்கப்பட்டு
தன் குடும்பத்தை
சிரமத்திற்கு ஆளாக்கினாள்!

கர்த்தரின் தாசனுக்கு
விரோதமாய்
புத்தியீனமாய்க் கூடிப் பேசினாள்
மிரியாம்!
விளைவு-
வெண்குஷ்டம் பிடித்து
பாளையத்துக்குப்
புறம்பாக்கப்பட்டாள்!

சிலநேரங்களில் இவர்களுள்
ஒருவராக நாமும் இருக்கிறோம்!
விளைவு- அதோ கதிதான்!

குணசாலியான ஸ்திரீயைக்
கண்டு பிடிப்பவன் யார்?
அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும்
உயர்ந்தது என்கிறது
நீதிமொழிகள் (31:10)

ஆனால்
குணசாலியாய் வாழ்வதைவிட
புதுமைப் பெண்ணாய் வாழவே
நம்மில் பலர்
பிரியப்படுகிறோம்
இன்று!

நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகள்

என்ற பாரதியின் வரிகளை
உதாரணமாகவும் கொள்கிறோம்!

அதே நேரத்தில்
ஞான நல்லறம்வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .

என்று அவர் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு கொள்வதில்லை!

ஞான நல்லறம் என்பதுதான்
என்ன? அதற்கான விடையை
ஞான மொழியாம்
நீதிமொழிகள் சொல்கிறது…

அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
இரத்தினக் கம்பளங்களைத்
தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர் பெற்றவனாயிருக்கிறான்.
மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
நீதிமொழிகள் 31:12-28
இதுவன்றோ இல்லற மாண்பு!

அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்;
நீதிமொழிகள் 31:11

அவள் புருஷனும் அவளைப்பார்த்து:
அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு;
நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று
அவளைப் புகழுகிறான்.
நீதிமொழிகள் 31:29

நம் புருஷன் நம்மை நம்புகிறாரா?!
நம்மை புகழ்கிறாரா?!

அவள் பிள்ளைகள் எழும்பி,
அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்;
நீதிமொழிகள் 31: 28
நம் பிள்ளைகள் நம்மை
பாக்கியவதி என்கிறார்களா?

தீமோத்தேயுக்குள் இருந்த
விசுவாசம் முந்தி
அவன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும்
அவன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது;
2 தீமோத்தேயு 1:5
என்று பவுல் தந்த சாட்சி
நமக்குப் பொருந்துமா?

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே
தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது என்கிறது
வேத வார்த்தை. 1 பேதுரு 3:3-4
தேவனுடைய பார்வையில்
நாம் விலையேறப் பெற்றவராய்
வாழ்கிறோமா?

கணவன்
பிள்ளைகள்
சமூகம்
தேவன் என
அனைவரின் சாட்சியும்
நமக்குண்டா!?

இச்சாட்சியைப் பெற நாம்
செய்ய வேண்டிய தென்ன?

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தையே
(1 பேதுரு 3:3 ) நாம்
வெளிப்படுத்த வேண்டும்!

சாந்தமும் அமைதலும்
எங்கு தோன்றும்?
கிறிஸ்துவின் அன்பு
மேலிடும்போது
அவை பிறக்கும்!

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது,
சினமடையாது,
தீங்கு நினையாது,
மாறாக,
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் நம்பும்,
சகலத்தையும் சகிக்கும்.’
1கொரிந்தியர் 13 : 4-7

நம்மில் அநேகர்
இவ்வனைத்தையும் விட்டுவிட்டு
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய
புறம்பான அலங்கரிப்பையே
1 பேதுரு 3:3
நாடித் தேடுகிறோம்!

ஆனால்
செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்
என்றல்லவா வேதம் போதிக்கிறது.

எல்லாவற்றையும் அநுபவிக்க
எனக்கு அதிகாரமுண்டு,
ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க
எனக்கு அதிகாரமுண்டு,
ஆகிலும்
நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
1 கொரிந்தியர் 6:12
என்ற எண்ணம் நமக்குள்
எழுந்தால் வாழ்வு சிறக்கும்!
புகழும் நிலைக்கும்!

திருமதி. சுகந்தி பிரபாகரன்

Read NowWomen’s Day Special Kavithai

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்துமஸ் உள்ளூர் விடுமுறை; மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!
தவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்
போதகரே, என்னால் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் நீரோ எல்லோரையும் உருகச் செய்து விட்டீரே
அரசாங்கத்தின் புதிய வழிகாட்டலைக் குறித்த சிறிய விளக்கம்:
தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்
மறுமணம்_பாவமல்ல
ஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்
ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை ...
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள்
உங்கள் போதகரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

Share this page with friends