ஐயோ! அவரா? இப்படி செய்திட்டார்? நம்பவே முடியவில்லையே?

Share this page with friends

இன்று நம்மால் நம்பமுடியாத, நம்மால் உயரத்தில் வைத்து பார்க்கப்பட்ட, மேன்மை படுத்தப்பட்ட, கர்த்தரால் பயன்ப்படுத்தப்பட்ட, புகழின் உச்சியில் இருந்த சிலர் விழுந்து போகையில் நம்மவர்களின் ஆச்சரிய கேள்விகள் தான் மேலே கேட்கப் பட்டவைகள். இப்படி பட்ட விழுகைகள் நடக்கும் போது நிச்சயமாக ஒரு பக்கம் வேதனை, இன்னொரு பக்கம் நமது விசுவாசத்தின் முன்மாதிரி கேள்விக்குறி ஆகுதல், மறுபக்கம் கர்த்தருடைய நாமம் மற்றும் கிறிஸ்தவத்திர்ககு தூஷனமாக மாறி விடுகிறது. ஆனாலும் கர்த்தர் தமது மகிமையை இழந்து விடுவதில்லை, கிறிஸ்தவத்தின் வளர்ச்சியையும் இவைகள் தடுப்பது இல்லை. என்றாலும் நாம் இவைகளில் ஜாக்கிரதை கொண்டு, இவைகள் ஏன் நடக்கிறது என்கிற காரணங்களை அலசி ஆராய வேண்டும். நான்கு விதமான எண்ணங்கள் மற்றும் செயல்களின் பின்னணியே இதற்கு காரணங்களாக இருக்க முடியும். நாம் நிதானித்து கொள்ளவும் வேண்டும். அவைகள்.

A. என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்கிற மனோபாவம்.

👉🏿 நான் யார் தெரியுமா? என்கிற அகம்பாவம்!, நான் எப்படி பயன்படுத்த படுகிறேன் தெரியுமா? என்கிற ஆணவ பேச்சு!, என் பாரம்பரியம் என்ன தெரியுமா? என்கிற கர்வம்!, என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது? என்கிற திமிர்!. நான் பதவியில் எப்படி கஷ்டப்பட்டு வந்தேன் தெரியுமா? என்கிற அதிகார தோரணை!, போன்ற கேள்விகளை கேட்கும் போது அந்த கேள்விகளுக்கு அடியில் விழுந்து போன பிசாசின் தந்திரங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடியாத எண்ணங்கள்.

👉🏿 அப்படி யாராவது தவறுகளை சுட்டிக்காட்டினால், எப்படி அபிசேகம் பண்ணப்பட்டவர்களை குறை சொல்லலாம் என்கிற எதிர் கேள்வி, உன்னை எனக்கு தெரியாதா? உன்னை ஒரு கை பார்ப்பேன், நான் ஜெபம் பண்ணினால் உன் பாடு அதோ கதி தான்! நாங்கள் மேன்மை அடைவது உனக்கு பிடிக்க வில்லை! நன்றி கெட்டவன், என்று கண்டமானி வசைபாடுதல்.

👉🏿 பதவி, பணம், புகழ்ச்சி மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் வெற்றியை நிர்ணயம் செய்து, தங்களை ஒரு பொருட்டாக எண்ணி பிறரை மட்டம் தட்டி, மிரட்டி, பயமுறுத்தி எல்லாரும் எங்களுக்கு அடிபணிந்து போக வேண்டும், நீயும் என்னிடம் தான் வருவாய் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று பழி வாங்கும் எண்ணம் தான் இதற்கு அடிப்படை காரணம்.

👉🏿 பொதுவில் நல்லவர்கள் போல நடித்து, புனிதர்கள் போல தங்களை வெளிப்படுத்தி கொண்டு, மறைவிடத்தில் பிறரை தூண்டி விட்டு, கோள் மூட்டி, சகுனி வேலை செய்து, தங்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஜால்ரா கேசுகளை வைத்து கொண்டு, தங்களை ஒரு பொருட்டாக எண்ணி, வீண் புகழ்ச்சியை விரும்பி, தங்களை சரிசெய்ய விரும்பாமல் தங்களது குறையை சுட்டி காட்டுகிறவர்களை எதிரி போல சித்தரித்து அவர்களுக்கு எதிராக உள்ளடி வேலை மற்றும் அரசியல் செய்து காரணம் இல்லாத எதிர் குற்றச்சாட்டுகளை அவர்கள் மேல் சுமத்தி வெளியே நல்லவர்கள் போல நடிக்கும் மாயமான எண்ணம் தான் அடிப்படை காரணம்.

எனவே விமர்சனங்கள், குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நமக்கு எதிராக வரும் போது அவைகளை நிதானித்து நாமும் நிலையற்ற இவுலகில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொண்டு சரி செய்ய கிருபையின் பாதையில் வர வேண்டும்.

B. தனக்கு தகுதி இல்லாத பரிசுத்தத்திர்க்கு ஒத்துபோகாத தவறான உறவுகள் மற்றும் தவறான தொடர்புகள்.

👉🏿யாரும் எங்களை கேள்வி கேட்க இல்லை என்கிற நிலை வந்த உடன், மனம் போன போக்கில் போகுதல். கர்த்தர் முதலில் பரிசுத்த ஆவியின் உள்ளுணர்வு மூலம் பேசுவார், வசனத்தின் மூலம் பேசுவார், தனிப்பட்ட வட்டாரத்தில் உள்ள நல்ல நபர்கள் மூலம் பேசுவார், பின்னர் தீர்க்கதரிசிகள் கொண்டு பேசுவார் பின்னர் சந்தர்ப்பம் கொடுப்பார். இவைகளில் எல்லாம் இவர்களுக்கே ஏற்ற தண்டனை வராமல் இருப்பதினால் இருதயம் விரும்புகிறது செய்ய துணிகரம் கொள்ளும்.

👉🏿 தங்கள் குறைகளை சுட்டி காட்டி பேசுகிற நபர்களை விட்டு பிரிந்து, தங்கள் சுய இச்சைகளுக்கு ஏற்ற நபர்களை தெரிந்து எடுத்து அவர்களோடு நேரத்தை செலவு செய்து தங்கள் காரியங்களை நியாயப்படுத்தி, வீணான அலுவல்களில் சிக்கி கொள்வார்கள். சில வேளை கர்த்தர் தந்த குடும்பம் உண்டு, கர்த்தர் நமக்கு தந்த ஊழியம் உண்டு என்பதையே மறந்து தங்கள் சுய வழிகளில் காரியத்தை நடத்தி கொள்வார்கள்.

👉🏿 பாவம் பரிசுத்தம் போன்றவற்றை பேசுவதை மறந்து விடுவார்கள். பிறரது பாவத்தை கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள். யார் எப்படி இருந்தால் எனக்கு என்ன? அது அவர்கள் பாடு என்று சுய நலவாதிகளாக மாறி, அவர்கள் கர்த்தருக்கு விரோதமான செயல்கள் செய்கின்றனர் என்று அறிந்து இருந்தும், அவர்கள் சரியில்லை என்று தெரிந்தும், நீதிமான்கள் மற்றும் நல்லோரை பகைத்து, கர்த்தருக்கு பிரியமில்லாத நபர்களோடு சம்மந்தம் கலப்பார்கள்.

👉🏿இவர்கள் ஊழியம் செய்வதை ஒரு பகுதியாக எடுத்து கொண்டு, வியாபாரம், பணம் சம்பாதித்து கொள்ளுதல், போன்ற வீண் புகழ்ச்சிக்கு அடுத்த காரியங்கள் மற்றும் வீண் அலுவல்களில் சிக்கி கொண்டு ஊழியம் செய்ய பணம் வேண்டும் என்பார்கள். பணம் இல்லாமல் என்ன செய்து கிழிக்க முடியும் என்று வேற எதிர் கேள்வி கேட்ப்பார்கள்.

எனவே நமது நேரம் காலம் எதற்கு செலவிடப்படுகிறது, யாரோடு நமது ஐக்கியம் மற்றும் நமது வேலை மற்றும் அழைப்பு என்ன என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

C. கடிந்து கொள்ளும் நாத்தான் போன்ற தீர்க்கத்தரிசிகளின்மை மற்றும் அப்படி பட்டவர்களை வெருத்தல்.

👉🏿 பாவத்தை பாவம் என்றும், உலகத்தை உலகம் என்றும், நீதியை நீதி என்றும், நியாயத்தை நியாயம் என்றும் பேசுவோரை இந்த காலத்திற்கு ஏற்றவர்கள் அல்ல என்று முத்திரை பதித்து அவர்களை வெறுத்தல்.

👉🏿 நாசுக்காக சொல்லுங்கள், நிதானமாக சொல்லுங்கள் என்று எல்லாவற்றையும் எளிதாக எடுத்து கொண்டு கடிந்து கொள்ளுதலை வெறுத்தல். நாத்த்தான் தீர்க்கதரிசி சொன்னாரே! அந்த நபர் நீர் தான் என்று! உள்ளதை உள்ளபடியே straight forward ஆக சொல்லி நம்மை புத்தி சொல்லும் நபர்களை ஒதுக்கியே தள்ளி விட்டோம். இயேசு கிறிஸ்து அறியாமல் பாவம் செய்தவர்கள் களை சிலுவையில் மன்னித்தார். ஆனால் தன்னோடு இருந்த பேதுரு அவரை சிலுவைக்கு போக கூடாது என்று தேவ சித்ததிற்கு விரோதமாக சொன்ன போது கடிந்து கொண்டார். பாவிகள் மன்னிக்கப்படலாம் ஆனால் பரிசுத்தவான்கள் கடிந்துக்கொள்ளப்படுவார்கள் என்பதே சத்தியம்.

👉🏿 பொதுவாக இப்படி கடிந்து கொள்பவர்கள் கொஞ்சம் ஆக்ரோசமாக தான் இருப்பார்கள். பவுலை பாருங்கள் பல இடங்களில் கோபமாக, கடும்கோபமாக தான் நடந்து கொள்வார்கள். உடனே இவர்களை சண்டைகாரர்கள் என்று தீர்ப்பு எழுதி, அவர்கள் சொல்லும் கருத்தை நிதானிக்காமல், அவர்களை எதிரிகளாக பாவித்து தங்களை நல்லவர்கள் என்று வேசம் போடுதல். இது எல்லாம் ரொம்ப நாள் ஓடாது.

👉🏿 ஆனால் இப்படி பட்ட உள்ளதை உள்ளபடி சொல்பவர்கள் தேவைப்படுவார்கள். எப்போது தெரியுமா? அவர்கள் குட்டு வெளிப்பட்டு, எல்லாம் கவிழ்ந்து போகும் போது இவர்கள் தேவைப்படுவர். ஆனாலும் தங்கள் தேவைகளுக்கு இவர்களை பயன்படுத்தி விட்டு, தங்களை மேன்மை படித்த இவர்களை பயன்படுத்துவர்.

எனவே கடிந்து கொண்டு, உள்ளதை உள்ளபடி புத்தி சொல்லும் நல்ல நபர்களை நண்பர்களாக கொள்ளுங்கள். ஏனெனில் இவர்களை கொண்டு தான் கர்த்தர் ஞானத்தை போதிக்கும், அறிவை உணர்த்தும் வெளிப்பாட்டின் தீர்க்கதரிசன வரத்தை கொண்டு நம்மை சீர்படுத்தி, பக்திவிறுத்தி அடைய செய்ய முடியும்.

D. கடைசியாக, பூரண சுவிசேஷமின்மை. சுவிசேஷ சத்தியத்தின் கலப்படம்.

👉🏿கிருபையின் உபதேசம், உற்சாக ஊக்கத்தின் சுவிசேஷம், உயர்வின் சுவிசேஷம், பெருக்கத்தின் சுவிசேஷம், அற்புத சுவிசேஷம் மற்றும் ஆசீர்வாத சுவிசேஷம் என்று பலதரப்பட்ட சுவிசேஷம் அறிவித்து இந்த உலகின் வாழ்வையே மட்டும் நோக்கம் கொண்டு சிலுவையின் உபதேசத்தை விட்டு விடுதல்.

👉🏿சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து தான் பவுலின் சுவிசேசத்தில் உயர்த்தப்பட்டார். அதினால் உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை அவர் ஊழியத்தில் வெளிப்பட்டது. சிலுவையின் உபதேசமும், சிலுவையின் இரத்தமும், கிறிஸ்துவின் உயிர்த்தெளுதலின் செய்தியும், அவரது நியாயதீர்ப்பும் அவரது இரண்டாம் வருகையும் இல்லாத சுவிசேஷத்தில் பூரணம் ஒரு போதும் இருக்க வாய்ப்பு இல்லை ஏனெனில் அங்கு பூரண கிருபை இல்லை.

👉🏿அற்புதம், உலக மேன்மையை மட்டும் சுவிசேசங்கள் புறக்கணிக்க படவேண்டும். அற்புதம், அடையாளங்கள், மற்றும் பொருளாதார பெருக்கங்கள் மட்டும் அன்றி நித்திய ஜீவனை பெற்று கொடுக்கும், மரணத்திற்கு பின்னரும் நம்மை நிலை நிறுத்தும் கலப்பட மில்லாத சுவிசேஷம் நமக்கு வேண்டும்.

👉🏿 பூரண சுவிசேஷத்தை கொண்டு நிறைய கர்த்தர் கிருபை தர வேண்டும். அந்த சுவிசேஷத்தில், மாம்சத்தில் வெளிப்பட இயேசு கிறிஸ்து, தெய்வத்துவத்தை நீருபித்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, திருஸ்சாந்த படுத்த பட்ட இயேசு கிறிஸ்து, பிதாவின் வலது பாரிசத்தில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியை கொடுக்கும் இயேசு கிறிஸ்து மற்றும் வரப்போகிற இயேசு கிறிஸ்து போன்ற சத்தியங்கள் இருக்க வேண்டும். அவற்றில் மனம் திரும்புதல் மற்றும் சபை ஐக்கியம் போன்றவற்றை வலியுறுத்த வேண்டும். இந்த மனம் திரும்புதலில் கீழ்கண்ட சத்தியங்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சபையில் ஐக்கியம் ஆக வேண்டும்.

  1. பாவ உணர்வு
  2. பாவி என்று ஒத்து கொள்ளுதல்
  3. பாவி என்று பாவ அறிக்கை செய்தல்.
  4. பாவத்திற்கு பரிகாரி இயேசு கிறிஸ்து என்று உள்ளத்தில் விசுவாசித்து, அவரது இரத்தத்தில் களுவப்படுதல்
  5. பாவத்தை சரிசெய்தல். Retribution
  6. பாவத்தில் இருந்து மீண்டு வர ஒப்புரவாகுதல்.
  7. புதிய வாழ்வு தொடர பரிசுத்தவான்களோடு ஐக்கியம் ஆகி சபையில் சேர்தல்.

பின்னர் ஞானஸ்தானம், பரிசுத்த ஆவி, ஜெபம், அபோஸ்தல உபதேசம், அப்பம் பிட்குதல், பக்துவிருத்தி, சாட்சியாக வாழுதல் மற்றும் முடிவு பரியந்தம் நிலைத்து இருந்து ஜீவ கீரிடத்தை பெறுதல் போன்ற நல்ல ஒருவருக்கொருவர் பொறுப்புள்ள சீர்திருத்தும் ஊழியத்தில் சேர்ந்து, ஒருவருக்கொருவர் பொறுப்பு உள்ளவர்களாக இருந்தால் ஒருவருக்கொருவர் தாங்கி, காப்பாற்றி நித்திய ஜீவனை பெற்று கொள்ளவும் தேவ நாம மகிமைக்காக செயல்படவும் முடியும்.

கர்த்தர் கிருபை தந்து நம்மை நடத்துவார் என்கிற விசுவாசத்தில்!

செலின்.


Share this page with friends