போதகரே, என்னால் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் நீரோ எல்லோரையும் உருகச் செய்து விட்டீரே

Share this page with friends

ஒரு பிரசித்தி பெற்ற நடிகர், ஒருமுறை 23- ம் சங்கீதத்தை நாடகமாகவே நடித்துக் காண்பித்தார். பின்பு, “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்” என்று ஒரு கெம்பீரக் குரலில் வாசித்து, முகபாவனைகளை அதற்கேற்றாற்போல் மாற்றி, ஏற்ற இடங்களில் தன் குரலை இறக்கி, ஏற்றி, நடுங்கச் செய்து அபிநயமும், சொல்லாற்றலும் சிறந்து விளங்க எல்லோரையும் கவரும்படிச் செய்தார்.

முழு சங்கீதமும் முடிந்ததும், ஜனங்கள் பேரானந்தமாய், ஆரவாரம் செய்து, கைதட்டி, மகிழ்ந்தனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு வயதான போதகர். மேடையை நோக்கி வந்தார். மேடையிலே நின்றபோது அவர் உள்ளம் தேவன் செய்த எண்ணில்லாத நன்மைகளை நினைத்துப் பொங்கியது.

அவர் 23 – ம் சங்கீதத்தை திறந்தார். ஒவ்வொரு வசனத்தையும் உருக்கத்தோடு, அர்த்தத்தை உணர்ந்தவராய், மெய்ச்சிலிர்க்க வாசித்தார்.

“நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் நான் கர்த்தருடைய வீட்டிலே” அவர் வாசித்துக் கொண்டிருக்கும்போதே அனைவரின் கண்களிலும் கண்ணீர் தேம்பியது. விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார்கள்.

முடிவில் நடிகர் கேட்டார், “போதகரே, என்னால் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் நீரோ எல்லோரையும் உருகச் செய்து விட்டீரே” போதகர் சொன்னார். “நடிகரே, உமக்கு 23 – ஆம் சங்கீதத்தைத் தெரியும். எனக்கோ, அந்த சங்கீதத்தின் மேய்ப்பரைத் தெரியும். அவர் என் மேய்ப்பர்” என்றார்.

கர்த்தர் என் மேய்ப்பர் ‘ என்று சொல்லும் நீங்கள், அவரது மேய்ச்சலின் ஆடாய், உங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுப்பீர்களா?

“எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான் 1:1)


Share this page with friends