சிறந்த எழுத்தாளரும் மூத்த போதகருமான பாஸ்டர் விக்டர் ஜெயபால் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

மதுரை; 02.03.2020
மதுரையை சேர்ந்த பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் அவர்கள் மார்ச் 1 (திங்கள் கிழமை) மாலை 7 மணியளவில் தனது முதுமையின் காரணமாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். அண்ணாரது நல்லடக்கம் மார்ச் 2 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 11.30 மணியளவில் மதுரையிலுள்ள சரந்தாங்கி தேவசாந்தி வளாகத்தில் பாஸ்டர். ஜோசப் பாலசந்திரன் (அல்லேலூயா டவர், மதுரை) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நல்லடக்க ஆராதனையில் திரளான போதகர்கள் மற்றும் விசுவாசிகள் கலந்து கொண்டனர். மறைந்த பாஸ்டர் விக்டர் ஜெயபால் அவர்கள் இளமைக் காலமுதல் இறைபணியில் நாட்டம் கொண்டு தன்னை அரசுப் பணியிலிருந்து விடுவித்துக்கொண்டு தேவ அழைப்புப் பெற்று இறையியல் படிப்பினை முறையாக கற்று போதகர் பணியை தொடர்ந்தார்.
யதார்த்த மனித வாழ்வில் கிறிஸ்துவின் தாக்கம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அவசியம் என்பதை சத்தியத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதிலும், எழுதுவதிலும் தனி சிறப்பு வாய்ந்தவர்.

சிந்திக்க வைக்கும் தலைப்புகளில் பக்திவிருத்திக்கேதுவான பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். சின்ன சின்ன கட்டுரைகளில் பெரிய பெரிய கருத்துக்களை மிக நேர்த்தியாக கொடுத்து கிறிஸ்தவ இலக்கிய உலகில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கர்த்தரின் எழுத்தாணி.
பாஸ்டர் விக்டர் ஜெயபால் அவர்கள் நமது டிசிஎன் மீடியாவை அதிகம் நேசித்தவர். இவர் எழுதிய பல கட்டுரைகளும் கவிதைகளும் நமது டிசிஎன் மீடியா இணையதளத்தில் இடம்பெற்றுள்ளதை நீங்கள் காண முடியும். ஆம் இந்த நீதிமான் மரித்தும் தனது எழுத்துக்கள் மூலம் பேசுகிறார்.
அருமை போதகரை இழந்து நிற்கும் குடும்பத்தாரை நமது ஜெபத்தினால் தாங்குவோம். தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவிப்பதுடன் மன ஆறுதலுக்கான ஜெபத்தையும் உறுதி செய்கிறது.
இவரது மரணத்திற்கு முன்னே இவர் எழுதிய ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் தொடர்ந்து நமது தளத்தில் வெளிவரும். போதகரது இலக்கிய சேவையை ஆக்ப்பூர்வமாக்கி உலகறியச்செய்யும் உன்னத பணியினை ஐீவத்தண்ணீர் பத்திரிகை ஆசிரியர் பாஸ்டர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் (மதுரை) தொடந்து செய்து வருகிறார்.
போதகரது கட்டுரைகளை வாசிக்க விரும்புவோர் கீழ்காணும் இணைய லிங்க் மூலம் வாசித்து பயன்பெறலாம்.
