பவுலின் பார்வை! (அப்போஸ்தலர் 14: 7-10)

Share this page with friends

பவுலின் கதிர்வீச்சப்  பார்வை

மலை உச்சி அல்லது
நடுக்கடல் இரண்டில் மட்டுமே,
சுத்தமான காற்றை
சுவாசிக்க முடியும்.

லீஸ்திரா( (Lystra) ஊரில் பிறந்த
ஊனமுற்ற அந்த வாலிபனுக்கு,
சுத்தமான காற்று தேவை இல்லை.
சத்தான கால்களே
தேவையாய் இருந்தது. 

நடக்கும் மனிதர்களைப்
பார்க்கும்போதெல்லாம்,
கரடு முரடான தனது
செயலிழந்த கால்களை
உற்று பார்த்து,
உள்ளுக்குள் அழுதுகொள்வான். 

அவனால் சிரிக்க முடியாது.
ஆனால் சிந்திக்க முடியும். 

அவ்வப்போது மனதால் மட்டும்
மதிலையும் மலையையும்
தாண்டிக்கொள்ளுவான். 

குணசாலியும் கூடாரவாசியுமான இவன்
தன் குணத்தால் மட்டும்
கோபுரத்தில் ஏறி
நின்று கொள்ளுவான். 

அந்த லீஸ்திரா பட்டணத்தில்
அவசர கதியில்
மின்சார ரயில் போல
மனித ரயில்கள்,
பயணித்தப் பாதையிலேயே
பயணித்துக் கொண்டிருந்தன. 

கிணற்றில் போடப்பட்ட
கல்லைப் போன்ற இந்த சப்பாணியை 
உற்றுப்பார்க்க,
அந்த ஊரில் ஒருவனுக்கும்
நேரமில்லை. 

அந்நாட்களில்
உள்ளூரில் புயலாகவும்
வெளியூரில் சூறாவளியாகவும்
சுழன்று அடித்து, சுவிசேஷம் அறிவித்து,
இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தியவர்கள்
பவுலும் பர்னபாவுமே! 

இவர்கள் நடத்திய 
நற்செய்திக் கூட்டம்,
லீஸ்திரா பட்டணத்து வீதி ஒன்றில்
நடைபெற்றது. 

மேடையில்லை,
அலங்கார தோரணை இல்லை. 
வால்போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை,
வாட்ஸாப் வசதியில்லை.
ஒலிபெருக்கி வசதிகள் இல்லை.
வரம்பெற்றவர் வருகிறார் என்ற
அறிவிப்புகள் ஏதுமில்லை.

நகரத்து மக்கள்,
நரகத்தை நோக்கி
விரைந்து சென்று கொண்டிருந்தபோது,
ஊர்ந்து ஊர்ந்து இந்த ஊனமுற்றவன்,
நற்செய்தி கூட்டத்திற்கு வந்து,
நடுவில் அமர்ந்துவிட்டான்.

அந்த அலங்கார வாசல் ஒன்றில்
அமர்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த
சப்பாணியான சகோதரனைப் போல,
பிச்சை கேட்காமல்,
பிரசங்கம் கேட்டுக்கொண்டிருந்தான். 

பிச்சை கேட்டாலும்,
பிரசங்கம் கேட்டாலும்
உற்றுப் பார்க்கவேண்டிய ஊழியக்காரர்கள்
(அப்போஸ்தலர் 3:4)
பரிசுத்த ஆவியில் நிறைந்து
உற்றுப்பார்த்தால்,
நடக்க வேண்டியது நடக்கும்.
நடக்கவே முடியாத
முடவனும் நடப்பான். 

பவுல் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.
பர்னபா கண்காணித்துக் கொண்டிருந்தார். 
பவுலின் கண்கள்
கண்காணிப்பு கேமராவை போல,
விசுவாசிகள் என்னும் கூட்டத்திற்குள்
உலாவி வந்தது.

கூட்டத்திற்கு வந்து
வசனம் கேட்ட யாவரையும்விட,
அந்த ஊனமுற்ற ஒருவன் மட்டும்,
இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம் 
உடையவனாய்  பவுல் பிரசங்கித்ததை 
கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தான். 

இன்றைக்கெல்லாம்
சத்தான கால்களை உடைய,
நடந்து செல்லும் விசுவாசிகளுக்கு,
இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம் இல்லை.

இன்னும் சில இடங்களில்
இன்றைய இளம் தலைமுறையினர்
பிரசங்கம் கேட்கிறார்களா?  அல்லது 
ஆன்லைனில் பீட்ஸாவுக்கு
ஆர்டர் கொடுக்கிறார்களா?  தெரியாது. 

பவுலின் கதிர்வீச்சப்  பார்வை,

பாதிக்கப்பட்ட அந்த
சப்பாணியின் மீது விழுந்தது.
அவனை உற்றுப்பார்த்து,
உரத்த சத்தமாய்,
நீ எழுந்து காலூன்றி
நிமிர்ந்து நில் என்று
கட்டளையிட்டார். 

பவுல் உற்றுப் பார்த்து,
ஆவியில் நிறைந்தால்,
ஒன்று பார்வை பறிபோகும்
(எலிமாவுக்கு) (அப்போஸ்தலர் 13:10,11)
இல்லையென்றால் அற்புதம் அரங்கேறும். 

பவுலின் பார்வையிலிருந்து
புறப்பட்டு வந்த தேவ வல்லமை,
கரடு முரடான அவனது கால்களுக்குள்
மடமடவென ஊடுருவிச் சென்றது.
எழுந்து நிமிர்ந்து நில்
என்ற வார்த்தையைக் கேட்டவுடனே
அவன் குதித்தெழுந்து நின்றான், நடந்தான்.

அன்றைய தினம்
அவனது முகத்திற்கும்
முழுச் சரீரத்திற்கும்
இரட்சிப்பு (விடுதலை) வந்தது. 

நிமிர்ந்து நடக்க என்ன வழி?
என்கிற விசுவாசிக்கு
வேதம் காட்டும் வழி என்னவென்றால்,
இரட்சிப்புக்கேற்ற விசுவாசம்
உடையவனாய் இருந்தால் போதும்.  
இந்த 2021-ல், நடக்காதவைகள்
நடக்கும்.

லீஸ்திரா பட்டணத்தில்
அதுவரை வீசிய நச்சுக் காற்று,
நற்செய்திக் காற்றாய் மாறிவிட்டது.
அன்றையதினம் சுவாசமுள்ள
யாவருக்குள்ளும்
சுவிசேஷம் ஊடுருவிச் சென்றது.

இந்தப் புதிய ஆண்டில்,
நீங்கள் பவுலைப் போல
பிரசங்கிக்க போகிறீர்களா?
பர்னபாவைப் போல
கண்காணிக்கப் போகிறீர்களா?
இரட்சிப்புக்கேற்ற  விசுவாசமுள்ளவர்களாய்
இருக்கப் போகிறீர்களா?

பிரசங்கியாரே, 
உங்கள் பார்வையில்
பரிசுத்த ஆவியானவரின் வல்லமை
கலந்திருக்கட்டும்.
உங்கள் செய்தியைக் கேட்போருக்கு
இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம்  உண்டா?
என்பதை உற்று பார்த்து,
எழுந்து காலூன்றி நில் 
என்று உரத்த சத்தமாய் சொல்லுங்கள். 
பிறவிச் சப்பாணியாய்
இருந்தாலும்
ஆவிக்குரிய  சப்பாணியாய்
இருந்தாலும்
அற்புதம் அரங்கேறும். 
ஆத்துமாக்கள்  பெருகும்.
ஆலயங்கள் நிரம்பி வழியும். 

எதை செய்தாலும்
கர்த்தருக்கென்று செய்தால்
கடல்கடந்தும்  பேசப்படுவீர்கள்
என்பது மட்டும் நிச்சயம். அல்லேலூயா.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள், 
மதுரை -14


Share this page with friends