செப் 1 முதல் தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு

அன்பானவர்களே, செப்டம்பர் மாத ஊரடங்கு தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தனது அறிக்கையை வெளியிட்டு உள்ளார். செய்திக் குறிப்பு எண் 182. இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளது. இவைகளின் மிக முக்கியமானவைகளை இப்பதிவில் காணலாம்.
தமிழகம் முழுவதும் நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் சில முக்கியத் தளர்வுகள் நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களின் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல அறிவிப்பை தான் தமிழக கிறிஸ்தவ சமூகம் பல மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
மக்கள் வாழ்வில் நம்பிக்கை அளிக்கும் மத வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு செப்டம்பர் மாதத்தில் அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சியே ஆயினும் இதற்கென்று பல்வேறு கட்டுப்பாடுகளும் உண்டு. இதற்கென நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஆகவே நாம் சற்று பொறுமை காக்க வேண்டிய அவசியம் உள்ளது. மத வழிபாட்டுத் தளங்களில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய விதங்கள் குறித்தும், எத்தனை பேர் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும், பங்கேற்கும்போது கையாள வேண்டியவைகளை குறித்தும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழிபாட்டுத்தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் அறிக்கையில் ஆறாவது பக்கத்தில் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்த கூட்டங்கள் உட்பட கலாச்சார நிகழ்வுகள், ஊர்வலங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களாக முதலமைச்சரின் அறிக்கையில் மத வழிபாட்டுத் தலங்களை திறக்க ஆண்டு வருமானம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையில் அதுபோன்ற விதிமுறைகள் குறிப்பிடப்படவில்லை.
மேலும் கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. ஆனால் செப்டம்பர் மாதம் முதல் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாய் நாம் ஜெபித்த ஜெபங்களுக்கு தேவன் பதிலை தந்திருக்கிறார். மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளது. எனினும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் தமிழக அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நம்மையும் நம் சமூகத்தையும் காத்துக் கொள்வோம்.