நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு

Share this page with friends

நாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் உள்ளவர்களையும், வெளியில் உள்ளவர்களையும் அழைத்து வந்து ஒலி பெருக்கி வைத்து அதிக சத்தம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக 107 வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

பின்னர் நாகர்கோவில் ஆர்டிஒக்கு தகவல் அனுப்பியும், அதனையும் மீறி 31ம் தேதி இரவு சம்பந்தப்பட்ட இடத்தில் கூடி ஜெப கூட்டம் நடத்த முயற்சித்துள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வடசேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் வந்து ஜெபக்கூட்டம் நடத்த கூடாது என்று எச்சரித்துள்ளார். அப்போது அங்கிருந்த பைசோன் மற்றும் சிலர் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசோபனை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், கூச்சல் போட்டு ஜெபக்கூட்டம் நடத்தியதாகவும் எஸ்ஐ சத்திய சோபன் அளித்த புகாரின் பேரில் பைசோன், அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த ஆனந்த்(38), வாத்தியார்விளை ஜெயமெர்லின்(48), சுபின்(21), கிறிஸ்துதாஸ்(55), மலன்(51), சுமதி(41), ஹெலன் ஜெனட்(48) உட்பட 16 பேர்  மீது வழக்குபதிவு செய்து வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.


Share this page with friends