ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம்; மீறினால் 10 ஆண்டு சிறை

கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டப்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் அண்மையில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது
ஹரியானா சட்டமன்றத்தில் மார்ச் 4 அன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மதமாற்ற தடுப்பு மசோதா 2022 அறிமுகப்படுத்தப்பட்டு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், இன்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
இந்த சட்டத்தின்படி, தவறான சித்தரிப்பு, ஆசை வார்த்தை கூறுதல், கட்டாயப்படுத்துதல், தேவையற்ற செல்வாக்கு, வற்புறுத்துதல், வசீகரம் மற்றும் மோசடியான முறைகளில் திருமணம் செய்தால் அது குற்றமாக கருதப்படும். சட்டத்திற்கு புறம்பாக மதம் மாற்ற தடுப்பு மசோதா 20022ன் படி, வசீகரம், மோசடி, வற்புறுத்துதல் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டால், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த மதமாற்ற தடுப்பு மசோதா 2022ன் படி, மைனர், பெண் அல்லது பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரை சேர்ந்தவர்களை யாரேனும் மதமாற்றம் செய்தாலோ அல்லது மதமாற்றம் செய்ய முயன்றாலோ அவர்களுக்கு குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேலும் குறைந்தப்பட்சம் 1 லட்சம் முதல் அதிகப்பட்சம் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதேபோன்ற சட்டத்தை சமீபத்தில் இமாச்சலப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் நிறைவேற்றி உள்ளன.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், மதமாற்றம் ஒரு பெரிய பிரச்சனை என கூறினார். சட்டவிரோத மதமாற்றங்களை தடுக்கும் மசோதாவை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் 127 வழக்குகள் பதிவாகியுள்ளன. மதமாற்றம் ஒரு பெரிய பிரச்சனை. விருப்பம் இருந்தால் ஒருவர் சட்டப்படி மதம் மாறலாம். ஆனால் சட்டத்திற்கு புறம்பான மதமாற்றத்திற்கு தான் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என கூறினார்.
சட்டசபை எதிர்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹுடா கூறுகையில், தற்போதுள்ள சட்டங்களில் வலுகட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கிரண் சவுத்ரி கூறுகையில், ஹரியானாவின் வரலாற்றில் இது ஒரு கருப்பு அத்தியாயம் என தெரிவித்தார். இந்த மசோதா வகுப்புவாத பிளவை ஏற்படுத்தும். இந்த மசோதா பயங்கரமானது. இது எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் ரகுவீர் சிங் காடியன் கூறுகையில், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு அவசரம் இல்லை. இந்த மசோதா பிரிவினைவாத அரசியலை நசுக்குவதாக உணர்கிறேன், இது நல்லதல்ல என கூறினார்.