46 ஆம் சங்கீதமும் இக்காலமும்

Share this page with friends

46 ஆம் சங்கீதமும் இக்காலமும்

46 ஆம் சங்கீதம் நமது மனப்பாடத்தில் நிறைந்த ஒன்று. இந்த சங்கீதம் லேவி கோத்திரத்தாரில் நியமிக்கப்பட்ட கோராகு புத்திரரின் ஆராதனை குழுவால் பாடப்பட்ட சங்கீதம்.

எண்ணாகமம் 16 ஆம் அதிகாரத்தில் பிரபலமானவர்களோடு சேர்ந்து மோசே மற்றும் ஆரோனின் ஆசாரியத்துவ தலைமயத்துவத்திர்க்கு எதிராக போராடினதின் நிமித்தம் அவர்களில் 250 பேர் மாண்டு போனாலும் கோராகின் குமாரரில் யாரும் சாக வில்லை என்று எண்ணாகமம் 26 ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். கொஞ்ச காலம் இவர்கள் செயல்பாடு வேதத்தில் மறைபொருளாக இருந்தாலும், சாமுவேல் தீர்க்கன் கொராகின் வம்சத்தில் வந்த நியாதிபதி என்று அறியப்படுகிறார். பிற்காலத்தில் இவர்களில் ஒரு சாரார் ராஜாவாகிய தாவீதால் ஏற்படுத்தப் பட்ட பாடல் குழுவில் இணைந்து சங்கீதங்களில் பல சரித்திரம் படைத்து இருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

இந்த 46 ஆம் சங்கீதம் பல ஆபத்துகள் சூழ எருசலேம் பட்டனம் இருந்தாலும் அதின் நடுவில் மகிழ்ச்சி என்னும் ஜீவ நதி பாய்வதாகவும், அதின் நடுவில் கர்த்தர் இருப்பதாகவும். அவரது சிங்காசனம் ஒருபோதும் அசையாது என்றும் கர்த்தர் அதற்கு எப்போதும் சகாயம் செய்வதாகவும் அர்த்தம் கொண்ட அருமையான சங்கீதம்.

இந்த சங்கீதத்தில் சொல்லப்பட்ட நான்கு ஆபத்துகள்

👉🏿 பூமி நிலை மாறி, பர்வந்தங்கள், மலைகள் அசையும் தன்மை. (பூமி அதிர்ச்சி.)

👉🏿 ஜலங்கள் கொந்தளித்து பொங்கும் தன்மை (அலைகளின் முழக்கம்)

👉🏿 ஜாதிகளின் சண்டை, கலவரம் மற்றும் யுத்தம்.

👉🏿 பூமியின் பாழ்க்கடிப்பு.

இவைகளின் நடுவில் என்ன செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும் என்பது தான் இந்த சங்கீதத்தின் மையக் கருத்து.

A. பயப்படாமல் இருக்க வேண்டும்

எந்த எதிர்மறையான சூழலில் நாம் கடந்து சென்றாலும் பயப்பட மாட்டோம் என்று மூன்றாவது வசனம் சொல்கிறது. ஏன் பயப்பட மாட்டோம்? ஏனெனில் தேவன் நமது அடைக்கலம் மற்றும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துனையானவர். என்ன நடந்தாலும் கர்த்தர் என் அடைக்கலம், அவர் என் பாதுகாப்பு என்கிற நம்பிக்கை உள்ளவர்களுக்கு பயம் இல்லை.பயம் தேவையில்லாத கவலை, டென்ஷன், நம்பிக்கையின்மை போன்றவற்றை வெளிப்படுத்தி அழிவுக்கு நேராக நம்மை நடத்தும் ஆனால் கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கை, அவர் மேல் உள்ள தெய்வீக பயம் நமக்கு விடுதலை, ஆசீர்வாதம், மற்றும் செழிப்பை கொண்டு வரும். தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை தராமல் அன்புள்ள பலமுள்ள தெளிந்த புத்தி உள்ள ஆவியை தந்து இருக்கிறார். பயம் வேண்டாம்.

B. தேவன் நம் நடுவில் இருக்கிறார் என்பதை உணர வேண்டும்.

தேவன் நமக்குள் வாசம் செய்தால், அவர் நம் நடுவில் இருந்தால், அவருக்கும் நமக்கும் சரியான தொடர்பு இருந்தால், அவர் மேல் நாம் விசுவாசம் வைத்தால், நமக்குள் ஒரு நதி ஓடி கொண்டே இருக்கும். அந்த நதியின் நடுவில் அவர் சிங்காசனத்தில் வீற்று இருக்கிறார். அது நமக்கு சந்தோசத்தை தரும் ஏனெனில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே நமது பெலன் என்று வசனம் சொல்கிறது. கர்த்தர் நம் நடுவில் இருந்தால் எப்பொழுதும் ரட்ச்சன்ய கம்பீர சத்தம், அதாவது இரட்ச்சனிய சந்தோசம் நம்மில் இருந்து கொண்டே இருக்கும். அதில் குறைபாடு இருந்தால் நமது தெய்வீக ஐக்கியத்தில் ஏதோ குழப்பம் இருக்கும். எனவே ஆதியில் இருந்த சந்தோச நிறைவில் வருவோம். சேனைகளின் தேவன் நம்மோடு என்றும் கூடவே இருப்பார். அவர் நம்மோடு கூட இருந்தால் அவரே எல்லா சூள்நிலைகளையும் ஆளுகை செய்வார் ஏனெனில் அவரது சிங்காசனம் என்றும் என்ன ஆபத்துகள் வந்தாலும் அசையாமல் அதன் நடுவில் நிலைத்து இருக்கும்.

C. அவரது செய்கைகளை வந்து பாருங்கள்

இவ்விதமான ஆபத்துகள் வந்ததால் தேவன் கிரியை செய்ய வில்லை என்று எண்ணி விடக்கூடாது. அதன் நடுவிலும் அவர் கிரியை செய்கின்றார். அதை கவனிக்க வேண்டும். எதிர்மறையான காரியங்களையே பார்த்துக் கொண்டு இருந்தால் கர்த்தர் செய்யும் கிரியைகளை கவனிக்க தவறுவோம். Corona வந்தாலும் அதன் நடுவிலும் கர்த்தர் இன்னும் சுகத்தை அனுப்பி தமது ஜனத்தை பார்த்துக் கொள்கிறார். தேவைகளை சந்திக்கிறார். அற்புதங்களை செய்கின்றார். பராமரிகின்றார். கிருபைகளை தருகின்றார். யோவான் ஸ்னாபகன் போன்று தனக்கு ஒரு ஆபத்து வந்த உடன் இயேசு மேசியாவே இல்லை என்கிற கண்ணோட்டத்தில் தனது இரண்டு சீடர்களை அனுப்பி இயேசுவை சந்தேக கண்ணோடு பார்த்தது போல இருக்காமல் கடினமான சூழலில் கர்த்தரின் செய்கைகளை பார்க்க வேண்டும். யோவான் சிறையில் இருந்தாலும் கர்த்தர் செய்கின்ற அற்புதங்கள் அதிசயங்கள் குறைவின்றி அன்று நடந்தது போன்று இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. நமது கண்கள் அதை பார்க்கட்டும். நாம் கர்த்தரின் செய்கைகளை கண்டால் சுற்றி உள்ளவர்கள் கண்களும் நிச்சயம் அதை காணும்.

D. அமர்ந்து இருந்து கர்த்தர் தெய்வம் என்று அறியுங்கள்

ஒரு மொழி பெயர்ப்பில் சண்டையிடாமல் அமைதியாக இருங்கள் என்று சொல்கிறது. நடக்கிற ஆபத்துகளுக்கு மாறி மாறி குற்றம் கண்டுப் பிடித்து சண்டை வாக்குவாதம் செய்து குற்றம் சாட்டும் அனுபவத்தை விட்டு விட்டு அமர்ந்து இருங்கள். நிதானமாக இருங்கள். பொறுமையாக இருங்கள். மனம் பதறி பேசாதிருங்கள். கர்த்தர் எப்படிப் பட்டவர் என்பதை அறிந்து கொள்ள கர்த்தர் ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை அறிந்து அவர் என்றும் நம்முடைய தேவன் மரணம் பரியந்தம் நம்மை நடத்துவார் என்கிற நிதானத்தில் பெருக வேண்டும்.

என்ன நடந்தாலும்! ஏது நடந்தாலும் அவரே அடைக்கலம்! அவரே துணை! அவரை நம்புவோம், பயம் விடுவோம், அவர் நம் கூட இருக்கிறார் என்று உணருவோம். அமர்ந்து இருப்போம். அவர் கடைசி வரை நம்மை நடத்துவார். கிருபை கூட இருப்பதாக!

செலின்


Share this page with friends