கேள்வி: ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. விளக்கவும்

Share this page with friends

கேள்வி: ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. எபி 10:31. விளக்கவும்

பதில்: இந்த வசனத்தை சரியாக புரிந்து கொள்ள 19ம் வசனத்திலிருந்து வாசிக்கவேண்டிய அவசியமள்ளது.

நியாயபிரமாணத்தை நிறைவேற்றி புதிய பிரமாணத்திற்குள் புறஜாதியான நம்மையும் ஒன்றிணைத்த கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து இந்த பகுதியில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எபே 2:14-18

நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணியிருக்கிறார். எபி 10:19

அவருடைய மாமிசம் நமக்கு புதிய மார்க்கத்தை ஏற்படுத்தியதால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியமும் உண்டாயிருக்கிறது. எபி 10:20

கிறிஸ்துவே பிரதான ஆசாரியராக தேவனுடைய வீட்டில் இருப்பதால், அவர் கட்டளைக்குக் கீழ்படிந்து பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாய், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபி 10:21-22, எபி 8:2

கிறிஸ்துவின் மேலுள்ள நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிட உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபி 10:23

ஏனோ கடமைக்கு சென்றோம், செய்தியைக் கேட்டுவிட்டு, பந்தியில் பங்கெடுத்து கடைசி ஆமேன் சப்தம் கேட்டதும் சீக்கிரமாக வீடு வந்து சேர்ந்தோம் என்று இல்லாமல் வந்திருக்கும் ஒவ்வொருவரையும் கவனித்து ஒருவருக்கொருவர் அன்பிலும் நற்கிரியையிலும் வளரும்படியாக சபை கூடிவருவது அவசியம். எபி 10:24-25

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, சத்தியத்தில் வளர்ந்தும், துணிகரமாய் பாவம் செய்கிறவர்களானால், கிறிஸ்துவின் மரணத்தையே உதாசீனப்படுத்துவதால், அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில், நியாயத்தீர்ப்பிற்கென்று நியமிக்கப்படுகிறார்கள். எபி 10:26-27

நியாயபிரமாண காலத்தில், எப்படியாக, தவறு செய்தவனை எந்த பாரபட்சமும் பாராமல், 2 அல்லது 3 சாட்சிகளின் அடிப்படையில் மரணதண்டனை கொடுக்கப்படுகிறதோ, கிறிஸ்துவின் மரணத்தை உதாசீனப்படுத்துகிறவர்களுக்கும் இதே தீர்ப்பு. எபி 10:28, உபா 17:2-13

பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுத்து சத்தியத்தில் வாழ்கிறவர்கள் மறுபடியும் பாவத்தில் விழுவது, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை தங்கள் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் என்று வேதம் சொல்கிறது. எபி 10:28-29

மகா பரிசுத்தரும், மாசற்றவரும், தேவகுமாரனுமான இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையே உதாசீனப்படுத்துகிறவர்களுக்கு எப்பேற்பட்டதான கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். எபி 10:29

அப்படிப்பட்டவர்களை, மனிதன் அல்ல தேவனே அதற்கான தண்டனையை தருகிறார் என்றால் எவ்வளவு பயங்கரமாயிருக்கும் என்பதை உணர்ந்து சத்தியத்தில் நடக்க பயத்துடன் இருப்போம். எபி 10:30-31

எடி ஜோயல் சில்ஸ்பி


Share this page with friends