சாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்

Share this page with friends

Sarah Navroji Amma

அன்னை சாராள் நவரோஜி அவர்களின் நினைவு நாள் 22.07.14 ஆகும். உலகம் நல்லவர்களை, நீதிமான்களை மறந்துவிடுகிறது. ஆனால் அரசியல்வாதிகளை மறவாமல் நினைவுகூறுகிறது. எது எப்படியோ அம்மாவைக் குறித்த ஒரு சில நினைவுகள் வரும் தலைமுறைகளுக்காக…

சகோதரி சாராள் நவரோஜி அவர்களது தகப்பனார் பெயர் சாலமோன் ஆசீர்வாதம் மதுரையை சேர்ந்தவர். பின்னாட்களில் தஞ்சையில் சங்கீத வித்வானாக இருந்தவர் கர்நாடக சங்கீதம் படித்தவர். தாயார் சவுந்தரம் அம்மாள் திருச்செந்தூரை அடுத்த ஆலங்கினறு சொந்த ஊராகும். தகப்பனார் சாது சுந்தர்சிங் மூலம் இரட்சிப்பை சுதந்தரித்தவர்.

1956 ம் வருடம் முதல் பாடலை கர்த்தருக்கென்று சகோதரி சாராள் நவரோஜி அவர்கள் பாடினார்கள். 18ம் வயதில் ஊழியத்திற்காக C.P.M. சபையால் இலங்கையில் பயிற்சிக்காக அனுப்பபட்டார்கள். ஊழியத்திற்கு போவதற்கு முன் Chennai E.B. இல் நல்ல உயரிய வேலையில் இருந்தவர்கள்.

ஊழியத்தினிமித்தம் வேலையை ராஜனாமா செய்துவிட்டு பயிற்சிக்காக கொழும்பு செல்ல இரயில் ஏறும்போது, வேலையும் இல்லை பணமும் இல்லை என்ன செய்வாய் என்று ஒருவர் கேட்ட போது எழுதிய பாடல் தான் “என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்” என்ற உலக பிரசித்தி பெற்ற பாடல்.

விவாகம் செய்யாமல் ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இறுதி வரை அதில் உண்மையாக இருந்தார்கள். பாலியல் சம்பந்தமான ஒரு குற்றசாட்டுகளையும் ஒருவரும் அவர்கள் மீது சுமத்தமடியாதபடி வெளியிலும் அந்தரங்கத்திலும் தன்னை பரிசுத்தமாய் காத்துக்கொண்டார்கள்.

மேடைகளில் பாடும் அம்மையார்

C.P.M. ல் இருந்து வெளியே வந்தப்பின் சீயோன் சுவிஷேச ஜெப ஐக்கிய சபையை ஸ்தாபித்து, தமிழகம் எங்கும் கிளை ஊழியங்களை நிறுவினார்கள். “நித்தியானந்த கர்த்தர் இயேசுவே” என்ற பாடல் சபையை மையமாக வைத்து இவர்களால் எழுதப்பட்டது.

C.P.M. ல் பாஸ்டர் தாமஸ் என்பவர் இவருடைய மாமாவாக இருந்தும் தன் தரிசனத்தை கடைசி வரை இழந்து போகாமல் ஊழியம் செய்தார்கள். பெந்தெகொஸ்தே பாடல்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் இவர்களால் வெளிப்பட்டது. சினிமாவில் பக்தி பாடல்கள் படும்படி A.V.M. நிறுவனர் இவர்களிடம் கேட்டபோது, இவர்கள் எடுத்த முடிவை பாடலாக பாடினார்கள் “உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரை பாடுவேன்”

புகைப்படம் எடுக்ககூடாது என்று தன் புகைபடத்தை வெளியிட விரும்பாதவர்கள். மேடைகளில் அவர்கள் பிரசங்கிக்கும் பொது உடன் ஊழியக்காரிகளை மாத்திரம் தன்னோடு நிறுத்தினார்கள்.

வெள்ளை சேலை அணிவதை மட்டுமே விரும்பினார். நாள்தோறும் 4 முதல் 6 மணி நேரங்கள் ஜெபத்தில் செலவிட்டார்கள். ஊழியத்தினிமித்தம் மேடை ஏறும் போது தனக்கென்று தனியாக விசேஷ நாற்காலி போடப்பட்டிருந்தால் அதில் அமர மறுத்துவிடுவார். அனைவருக்கும் போடப்பட்டிருக்கும் பொதுவான நாற்காலிகளில் அமர்வதையே விரும்புவார். திரள் கூட்டங்களில் பிரசங்கிப்பதை விட ஆரம்ப சபைகள், குக்கிராமங்களுக்கு சென்று ஊழியம் செய்ய விரும்பியவர். எங்கு சென்றாலும் தன்னோடு டேம்பரின் என்ற இசைகருவியை வைத்திருப்பார்.

தனது பாடலில் சினிமா வரிகளோ இராகங்களோ கலக்காமல், வார்த்தை அலங்காரங்கள் இல்லாமல் இலக்கிய நயத்துடன் எளியோரும் பாடத்தக்க விதத்தில் பாடல் எழுதியவர்கள். தமது அனைத்து பாடல்களின் இறுதி சரணத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றி அழுத்தமாக பதிவிட்டவர்கள். பாடல்களில் வேதாகம உபதேச பிழைகள் இல்லாத வண்ணம் மிக கவனமாக பாடல் எழுதியவர்கள்.

அன்னை சாராள் நவரோஜி அவர்கள் சுமார் 500 பாடல்களை ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளிலும் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடுகளையும், நிந்தைகளையும், கண்ணீரையும் அனுபவித்தவர்களுக்கு இவர்கள் இயற்றிய பாடல்கள் மட்டுமே மருந்தாகவும், ஆகாரமாகவும் இருந்தது.

நித்திய இளைப்பாறுதலில் அம்மையார்

நீதிமான் நித்திய கீர்த்தி உள்ளவன். தேவன் அவர்கள் விட்டுசென்ற ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.

மேலும் இந்த அம்மையாரை பற்றிய கூடுதல் தகவல்கள் இருக்குமானால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவைகளை பரிசீலித்து இக்கட்டுரையில் நாங்கள் இணைத்துக்கொள்வோம்.

அன்பானவர்களே, உங்களது கட்டுரைகள், பிரசங்க குறிப்புகள், காணொளி பதிவுகளை இங்கே பதிவிடலாம். பக்திவிருத்திக்கேதுவானவைகள் விரைவில் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும். சாதாரண சாமானியரின் திறமைகளும் உலக அரங்கில் பாரபட்சம்பாராது முன்னிருத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இப்பணியை நாங்கள் செய்து வருகிறோம். நன்றி

Share this page with friends