RBR RUBBER PRODUCTS

50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது

Share this page with friends

RBR

“50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால், இந்த lockdown-னிலும் என்னுடைய வியாபாரம் 25 lakhs -க்கும் மேலாக உயர்ந்து கொண்டு இருக்கிறது.”

எனது பெயர் ராஜேஷ், விழுப்புரத்திலிருந்து…

இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்திலும் எனக்கு வியாபாரம் இருக்காது என்று தெரிந்த போதிலும், தொடர் முயற்சியால் இந்த கோவிட்-19 நேரத்திலும் கடந்த 90 நாட்களாக 25 இலட்சத்திற்கும் அதிகமாக எனக்கு அறிமுகம் இல்லாத துறையில் நெருக்கடியான காலத்தில் தொழில் புரட்சி செய்துகொண்டிருக்கிறேன்.

இதற்கு காரணத்தை கூறுகிறேன்….

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பக்தி மார்க்கமான குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய பள்ளி படிப்பை முடித்தவுடன் டிப்ளமோ மோட்டார் மெக்கானிக் படிப்பை படித்து முடித்துவிட்டு வேலை செய்து முன்னேற வேண்டும் என்று, 123 ரூபாய் எடுத்துக்கொண்டு திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் எந்த ஊர் செல்லவேண்டுமென்று தெரியாமல் அனைத்து பேருந்துகளிலும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தேன்.

இதை பார்த்த ஒரு நடத்துனர் ” தம்பி நீ எங்கு செல்லவேண்டுமென்று கேட்டார்”. நானோ, உங்கள் வண்டி எங்கே செல்கிறது என்று கேட்டேன். மதுரை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது என்றார். என்னிடம் 123 ரூபாய் மட்டும் இருந்ததினால் திருச்சி செல்ல டிக்கெட் விலை என்ன என்று கேட்டேன். 47 ரூபாய் என்று சொன்னவுடன், திருச்சி செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு அதிகாலையில் திருச்சி சென்றடைந்தேன்.

அங்கு வேலை தேட துவங்கினேன், அப்பொழுது முன்பின் தெரியாத ஒரு நபரிடம் வேலை கேட்டேன்.அவர் வேலை செய்யும் அண்ணாமலை டிரான்ஸ்போர்ட்-இல் என்னை அழைத்துக்கொண்டு 350 ரூபாய் சம்பளத்திற்கு பணியில் சேர்த்துவிட்டார். நான் மிகவும் துடிப்புடனும், உற்சாகத்துடனும் வேலை செய்தேன், அதை பார்த்து அந்த நிறுவனத்தின் முதலாளி, அவர் வைத்திருந்த 40 பேருந்துகளில் தினமும் வருகிற வசூல் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எனக்கு தந்தார்.

நான் பக்தி மார்கத்திலேயே வளர்க்கப்பட்ட படியினால், என் தாய் கடவுளுக்கு உண்மையாய் இருக்க வேண்டும், ஜெபம் செய்ய வேண்டும், கடவுளுடைய வார்த்தையை வாசிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு கற்பித்ததினால், நான் இந்த பொறுப்பான வேலையிலே மிகவும் உண்மையோடு இருக்க ஆரம்பித்தேன்.
தினம்தோறும் பேருந்துகளில் வசூல் செய்யப்படும் பணத்தை இருமுறை ஒப்படைப்பார்கள். 40 பேருந்துகளின் வசூல் பணத்தை என்னிடம் தான் பொட்டலங்களாக ஒப்படைப்பார்கள். இவ்வாறாக தினமும் 80 பொட்டலங்கள் வீதம் மாதத்திற்கு சுமார் 2400 பண பொட்டலங்கள் வரும்.அதில் ஒவ்வொரு பொட்டலத்தையும் பிரித்து பணத்தை சரியாக எண்ணி கணக்கை முடித்து ( 25 பைசா, 50 பைசா, 75 பைசா முதற்கொண்டு) என்னுடைய கணக்கை மிக சரியாக எழுதிவைத்து ஒப்படைப்பேன்.

அந்த 2400 பணப்பைகளில் மீதமுள்ள பைசாக்கள் தோராயமாக 1000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். எனக்கு முன்பு பணிபுரிந்த நபர்கள் அந்த பைசாக்களை அலட்சியமாக விட்டுவிடுவார்கள், கணக்கும் காட்டமாட்டார்கள். இதனை கண்காணித்த என் முதலாளி என்னுடைய உண்மையான வேலையை பார்த்து 350 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தினார். நானும் மிக உற்சாகத்தோடும், உண்மையோடும் வேலை செய்து கொண்டிருந்தேன்.

சில நாட்கள் சென்ற பிறகு ஒரு வங்கி அதிகாரியின் அறிமுகத்திலும், என் முதலாளியின் சிபாரிசின் மூலமாக எனக்கு சிட்டி பேங்க்-ல் மாதம் 1500 சம்பளத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலையில் உண்மையும் உத்தமமுமாக இருந்து சுமார் 5 வருடத்தில் மாதம் 40000 சம்பளத்திற்கு உயர்வு கிடைத்தது

கடவுளின் ஆசீர்வாதத்தினால் 2006-ல் எனக்கு திருமணம் நடந்தது. பின்பு விழுப்புரத்தில் RBR Rubber Product என்ற தொழிற்சாலையை தொடங்கினோம். நாட்கள் செல்ல செல்ல புதிய தொழில் என்பதால், பல வருடங்கள் வேலை செய்து விட்டு குடும்பமாக தொழில் தொடங்கியவுடன் மிகுந்த பயமும், நெருக்கங்களும், பணக்கஷ்டங்களும் சூழ்ந்து கொண்டது.

ஒருநாள் எங்களுக்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரி இன்று தான் கடைசி தேதி, நீங்கள் அந்த பணத்தை கட்டவில்லையென்றால் ஜப்தி செய்துவிடுவோம் என்று சொல்லி, கடினமாக திட்ட தொடங்கி, இப்பொழுது இரவு 7 மணி ஆகிறது, இன்னும் 1 மணி நேரத்திலே நீங்கள் ஏதாவது ஏற்பாடு செய்து முழுப்பணத்தையும் கட்டுங்கள் என்று சொல்லி வீட்டிற்குள் அமர்ந்துவிட்டனர். நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பமாய் மிகவும் அழுது கொண்டு மேல் மாடிக்கு சென்று கடவுளிடம் ஜெபம் செய்ய ஆரம்பித்தோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை மாற்றிப்போடும் இயேசுவே என்று கதற ஆரம்பித்தோம். ஆனால் வங்கி அதிகாரிகளோ, இவர்கள் நம்மை மதிக்காமல், மேலே சென்று கதவை அடைத்துவிட்டார்களே என்று கடும் கோபத்தோடும், இவர்களுடையதை முழுவதும் ஜப்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்கிக்கு சென்றுவிட்டனர்.

அதிகாரிகள் ஜப்தி செய்வதற்கான ஆவணங்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தனர். எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்கை நிரந்தரமாக தடை செய்ய தொடங்கியபோது எங்களுடைய வங்கி கணக்கில் பணம் இருந்ததை பார்த்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு கடனுக்கான தொகையை வரவுவைத்துக்கொண்டனர். எங்களை தொடர்பு கொண்டு, நீங்கள் மேல் வீட்டிற்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு இந்த இரவிலே எப்படி பணத்தை கட்டினீர்கள் என்று கேட்டபொழுது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, மறுநாளில் வங்கிக்கு சென்று விசாரித்தபோது எங்கள் நிறுவனத்தின் வங்கி எண்ணானது 15 -ல் முடியும். ஆனால் மும்பையிலுள்ள வங்கி அதிகாரிகள் 51 -ல் முடியும் வங்கி கணக்கின் பணத்தை மாறுதலாக எங்கள் வங்கி எண்ணிற்கு அனுப்பிவிட்டனர். பின்பு எங்கள் வங்கி மேலாளரும், வங்கி அதிகாரிகளும் இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினர், பின்பு நான் பணம் அனுப்பிய நபரிடமும் பேசி, எங்கள் சூழ்நிலைகளை எடுத்து கூறி 2 மாதம் தவணை கேட்டேன். அந்த மனிதரும் தவணை கொடுத்தார், அந்த பணத்தை முறையாக திருப்பி செலுத்தினேன்.

இந்த சம்பவத்திலிருந்து ” இயேசுவை” நெருங்க ஆரம்பித்து, குடும்பமாக தேவனிடத்தில் தினமும் ஜெபிக்க ஆரம்பித்தோம்.

எதை செய்தாலும், ஜெபம் செய்து அந்த வேலையை துவங்க ஆரம்பித்தோம். கடவுள் எங்களை மிகவும் அதிகமாக ஆசீர்வதித்தார். மேலும் பல தொழில்கள் தொடங்க கடவுள் கிருபை கொடுத்தார்.

எங்கள் நிறுவனங்களாவது,
RBR RUBBER PRODUCTS
RBR ASSOCIATES
RBR MARKETING
NELLAI HIGH CLASS CATERING
என்று விரிவடைய தொடங்கியது.

RBR RUBBER PRODUCTS

இந்த கோவிட்-19 லாக்டவுன் தொடங்கியதும் எல்லா தொழிலை போல நமது தொழிலும் முடங்கிவிடுமோ என்று நினைத்து பல வித குழப்பத்துடன் இருந்தேன். தினமும் நாங்கள் குடும்பமாக ஜெபிப்பது வழக்கம். ஒருநாள் தொழிலுக்காக ஜெபித்துவிட்டு, குடும்பமாக பேசிக்கொண்டிருந்தபொழுது, கோவிட்-19 பாதுகாப்பு உபகாரணங்களான mask, sanitizer, gloves, oximeter, thermometer போன்ற பொருட்களை விற்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. RBR MARKETING மூலமாக எங்களுக்கு தெரிந்த நண்பர்கள் உதவியோடு விற்பனை செய்ய தொடங்கினேன்.

கடந்த 90 நாட்களாக ஞாயிற்றுகிழமை தவிர, நானும் எனது குழுவும் விடுப்பு எடுக்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம். தரமான பொருட்களை பல இடங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்பிவைக்கிறோம். 25 இலட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்திருக்கிறோம். இதில் கிடைக்கும் சிறு தொகை மூலமாக அநேக எளிய உணவு இல்லாத மக்களுக்கு உணவு அளிக்க கடவுள் உதவி செய்து வருகிறார்.

மேலும் எங்கள் நிறுவனத்தின் பொருட்கள் 9 மாநிலங்களுக்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. எனவே இந்த அளவிற்கு உயர்த்தி ஆசீர்வதித்த கடவுளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில், கிராமங்கள் தோறும் சென்று கடவுளுடைய வார்த்தைகளை சொல்லி வருகிறோம்.

அன்று 50 பைசா-க்கு உண்மையாக கடவுள் வைத்ததினால், இன்று பல நிறுவனங்களை நிறுவகிக்கும்படி எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து வருகிற, நம்முடைய மெய்யான கடவுளாகிய இயேசு கிறிஸ்துவுக்கே எனது வாழ்க்கை.

“ கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்.” மத் 25:23.

-ராஜேஷ் .
விழுப்புரம்.


Share this page with friends