சாயங்காலத்து எழுப்புதல்!வித்யா’வின் பதிவு

எழுப்புதல்.
இது ஒரு இனிமையான வார்த்தை.
வல்லமையான தொடக்கம்.
ஆவிக்குரிய கூட்டங்களிலும்
அறிவிப்புகளிலும்
அடிக்கடி எடுத்தாளப்படும் பதம்.
உள்ளான மகிழ்ச்சியின் விதை.
அடிக்கடி வந்துபோகும் வரமாக
பலர் இதை வைத்திருக்கிறார்கள்.
பிறந்த குழந்தை
படுத்த நிலையிலேயே
கிடப்பதில்லை.
அப்படி இருப்பதை யாரும்
விரும்புகிறதுமில்லை.
குழந்தை முண்டுகிறது,
துள்ளுகிறது, அசைகிறது,
ஆடுகிறது, எழும்புகிறது,
நடக்கிறது, ஓடுகிறது.
இது தொடர்கிறது.
இதுதான் எழுப்புதல்.
எழுப்புதல் அடிக்கடி
வந்துபோவதில்லை.
துவங்கினால்
முடிந்துபோவதில்லை.
தொடரும். நின்றுபோகாது.
எழுப்புதலுக்கு
ஓர் எழுப்புதல் தேவையா?
எங்குபார்த்தாலும் கூட்டங்களில்
கருத்தரங்குகளில் ஆராதனைகளில்,
உபவாச ஜெபங்களில்
பெரிய அசைவு அல்லது எழுப்புதல்
மக்களிடையே காணப்படுகிறது.
இது மகிழ்ச்சியான காரியமே.
இது நடக்கவேண்டிய காரியமும்கூட.
கலந்துகொண்டவர்கள்
என்ன சொல்லுகிறார்கள்?
கூட்டம் பரலோகம் போல இருந்தது
என்கிறார்கள்.
இப்போது அந்த பரலோக மகிழ்ச்சி
தொடர்கிறதா? என்று கேட்டால்
யோசிக்கிறார்கள்.
எழுப்புதலின் கிரியை
தொடர்வதுதான்
உண்மையான எழுப்புதல்.
சிலமணி நேரங்கள்,
சில நாட்கள் மட்டுமே
இருந்துபோவது
எழுப்புதல் அல்ல.
அந்த நாட்களில்
பெரிய எழுப்புதலைச்
சந்தித்த நாடுகளின்
தற்போதைய நிலை என்ன?
சிந்திக்கவேண்டிய கேள்வி.
அநேகருக்கு கூட்டங்களின்
எழுப்புதலைப் பற்றி
வீண் பெருமையாக பேசுவதே
பெரிய சாட்சியாகக்
காணப்படுகிறது.
அவர்களின் நடைமுறை
வாழ்க்கையில்
அந்த எழுப்புதலின் கனிகளைக்
காண முடிகிறதில்லை.
வேதனை தான்!
லூக்கா எழுதின சுவிசேஷம்
24 ம் அதிகாரத்தில்
எருசலேமிலிருந்து
எம்மாவூர் சென்ற
இரண்டு சீஷர்களை
நாம் சந்திக்கிறோம்.
உயிர்த்தெழுந்த இரட்சகர் இயேசு
அவர்களை வழியில் சந்தித்தார்.
நானே வழியும்
சத்தியமுமாய் இருக்கிறேன் என்றவர்
அவர்களோடு அவ்வழியில் நடந்தார்.
நீங்கள் துக்க முகம் உள்ளவர்களாய்
வழி நடப்பது ஏன்? என்று விசாரித்தார்.
செய்கையிலும் வாக்கிலும்
வல்லமையுள்ள தம்மைகுறித்து
அவர்கள் பேசிக்கொண்டே
நடப்பதை அறிந்தார்.
இஸ்ரவேலரை மீட்டு
இரட்சிப்பவர் என்று
நாங்கள் நம்பியிருந்தோம்
என்று வருத்தத்தோடு
இயேசுவைப்பற்றி
இயேசுவிடமே அறிக்கை
செய்தார்கள்.
அவர்கள் இயேசுவை
நம்பி இருந்தார்கள்.
அவர் உயிரோடிருக்கிறார் என்பதை
வெளிப்படுத்தினார்கள்.
எனினும்
மந்த இருதயமுள்ள
அவர்களுக்கு ஓர் எழுப்புதல்
தேவையாய் இருந்தது.
வழிப் பயணம் தொடர்கிறது.
உன் வாழ்க்கைப் பயணம் போல
வழிப்போக்கனைப் போல
இயேசுவும் அவர்களைத் தொடர்கிறார்.
அது ஒரு சாயங்கால நேரம்.
அதனால்தான்
சாயங்காலத்து எழுப்புதல் என்று
தலைப்பு கொடுத்தேன்
அவர் தமது பாடுகள்,
மரணம், உயிர்த்தெழுதலின் மகிமை
அனைத்தையும்
வேத வாக்கியங்கள் மூலம்
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகள்
சொன்னவற்றை
நடந்துகொண்டே
விவரித்துக்கொண்டிருந்தார்.
இது ஒரு கருத்தரங்கிற்கு,
எழுப்புதல் கூட்டத்திற்கு, அல்லது
ஆராதனைக்கு சமமாகும்.
வழிப் பயணத்தில்
கருத்துக்களைப்
பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
அச்சமயம்
அவர்கள் இருதயம் அவர்களுக்குள்ளே
கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுதான் எழுப்புதல்.
எழுப்புதல் இருந்தும்
அவர்கள் கண்களால்
இயேசுவைக்
காண முடியவில்லையே!
மந்த இருதயமும்
துக்க முகமும் மாறவில்லையே!
இப்படிப்பட்ட
எழுப்புதல் கூட்டங்கள்
இன்றைக்கும் ஏராளம்.
இருந்தும்
என்ன பயன்?
இதயத்தில்
கொழுப்பு மட்டும்
கரைகிறது!
காணிக்கைப் பை
நிரம்புகிறது
களஞ்சியங்கள்
பெரிதாகிறது
கொழுந்துவிட்டு இதயம் எரிந்தும்
அவர்கள் உள்ளத்தில்
இவர்தான் இயேசு என்ற பார்வை
உதயமாகவில்லையே?
ஏன்?
கண்கள்
திறக்கப்படவில்லை.
குருட்டுத்தனமான எழுப்புதல்
வாழ்க்கையில் ஜெயத்தைக்
கொண்டுவராது.
சாயங்காலமாகிறது
பொழுதும்போகிறது
எங்களுடனே தங்கியிரும் என்று
எழுப்புதல் செய்தி கொடுத்த
இயேசுவை அவர்கள்
வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.
இயேசு அவர்களோடு
பந்தியிருந்தார்.
அப்பதை பிட்டு ஐக்கியத்தை
வெளிப்படுத்தினார்.
அவர்களை ஆசீர்வதித்தார்.
அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன.
அவரை அறிந்தார்கள்.
எழுப்புதல் அவர்களுக்குள்ளே
தொடங்கிற்று.
அந்நேரமே எழுந்திருந்தார்கள்.
எருசலேமிற்கு தாமதமில்லாமல்
திரும்பினார்கள்.
பதினோரு பேரோடுகூட
ஐக்கியமானாரகள்.
சாட்சியைப்
பகிர்ந்துகொண்டார்கள்.
இயேசுதாமே அவர்களுக்கு
நடுவிலே நின்று
உங்களுக்கு சமாதானம்
என்றார் (லூக்கா 24:36)
அன்று தொடங்கிய
அவர்களின்
உண்மையான எழுப்புதல்
பின்பு ஒருநாளும்
தொய்ந்துபோகவில்லை.
தொடர்ந்தது. தொடர்ந்தது.
தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
மனக்கண் திறக்கும் எழுப்புதல்
உனக்கும் தேவை.
உணர்ச்சி அல்ல.
இசைக்கருவிகளின்
சத்தத்தால் உண்டாகும்
எழுப்புதலும் அல்ல
சில இடங்களில்
இதயத்தையே நிறுத்திவிடும்
அளவிற்கு அதிரடியாக
சத்தங்கள் எழுப்பப்படுகின்றன
உளப்பூர்வமான
எழுப்புதல் தேவை.
உண்மைதானே.
அதில் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் இருக்காது
அது ஒரு மெல்லிய நீரோடையைப் போல
ஓடிக்கொண்டிருக்கும்
மான்கள்
நீர்வீழ்ச்சியை அல்ல
நீரோடையைத் தானே தேடிவரும்
“எழுப்புதல் அனுப்பும்
எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
அல்லேலூயா
எழுப்புதல் அனுப்பும்
எழுப்புதல் அனுப்பும்
சீக்கிரத்திலே”

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
ஆசிரியர்
(வழிப்போக்கனின் வார்த்தைகள் )
தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்,
மதுரை -14